2014-12-25 14:07:34

ஈராக்கில் புலம்பெயர்ந்தோருக்கு திருத்தந்தை அனுப்பிய கிறிஸ்மஸ் வாழ்த்து


டிச.25,2014. டிசம்பர் 24, இப்புதன் மாலை நான்கு மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டின் Erbil நகருக்கருகே அமைந்துள்ள Ankawa என்ற முகாமில் தங்கியுள்ள புலம் பெயர்ந்தோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். TV 2000 என்ற தொலைக்காட்சி நிறுவனம் செயற்கைக் கோள் வழியே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, நேரடியாக ஒளிபரப்பானது.
திருத்தந்தை வழங்கியச் செய்தியின் சுருக்கம்:
"உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள். இன்று மாலை, கிறிஸ்மஸ் திருப்பலியில் கலந்துகொள்ளவிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் அரவணைக்கிறேன். பிறப்பதற்கு ஓர் இடமின்றி வாடிய இயேசுவைப்போல, நாடுவிட்டு நாடு புலம் பெயர்ந்த இயேசுவின் குடும்பத்தைப் போல, நீங்களும் கிறிஸ்மஸ் காலத்தில் அவருடன் முழுமையாக ஒன்றித்திருக்கிறீர்கள்.
அன்பு சகோதர, சகோதரிகளே, என் முழு இதயத்தோடும், உங்கள் அனைவரோடும் நான் மிகவும் நெருக்கமாய் உள்ளேன். தங்கள் மென்மையான குணத்துடன் இயேசுவும், அன்னை மரியாவும் உங்களை அரவணைப்பார்களாக!"
இச்செய்தியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் மக்கள் அனைவருக்கும் தன் சிறப்பான கிறிஸ்மஸ் ஆசீரை வழங்கினார்.
"அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் நடுவில் வாழும் குழந்தைகளைப்போல, இயேசுவும் மென்மையான, அப்பழுக்கற்ற ஒரு குழந்தையாக இன்றிரவு நம்மிடம் வருகிறார். உங்கள் நடுவில் உள்ள குழந்தைகளைச் சிறப்பாக எண்ணிப்பார்க்கிறேன். இவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் பலர் கொடுமைகளுக்கு உள்ளாயினர்.
உங்கள் நடுவே வாழும் முதியோரையும் சிறப்பாக எண்ணிப்பார்க்கிறேன். குழந்தைகளுக்கும், வயதில் முதிர்ந்தோருக்கும், உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து எழும் ஆசீரை வழங்குகிறேன்" என்று திருத்தந்தை தன் தொலைபேசி செய்தியை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.