2014-12-23 14:28:20

விவிலியத்
தேடல் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை பகுதி - 6


RealAudioMP3 ஒரு கற்பனை காட்சியுடன் இன்றையத் தேடலை ஆரம்பிப்போம். மரண தண்டனைக்கென தூக்கு மேடையில் நிற்கும் ஒரு குற்றவாளியின் தலையும், முகமும் கறுப்புத் துணியால் மூடப்படுகின்றன. அவரது கழுத்தைச் சுற்றி, தூக்குக் கயிறு மாட்டப்படுகிறது. மற்றொரு காட்சியில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, மின்சார நாற்காலியில் பிணைக்கப்படுகிறார்; அவரது கரங்கள், கால்கள், தலை ஆகிய பகுதிகளில் சக்திமிகுந்த மின்சாரம் பாய்வதற்கு ஏற்றவாறு இணைப்புக்கள் பொருத்தப்படுகின்றன. அவ்வேளையில், திடீரென, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதென்றும், அவர் சுதந்திரமாகச் செல்லலாம் என்றும் ஓர் ஆணை வந்து சேர்ந்தால், தூக்கு மேடையில், அல்லது மின்சார நாற்காலியில் இருக்கும் மனிதரின் நிலை எப்படி இருக்கும்? நம்பமுடியாத மகிழ்வின் உச்சத்தை அடையும் அவர், பேச்சிழந்து, மூச்சிழந்து ஒருவேளை மயங்கி விழக்கூடும். அந்த மகிழ்வில் அவரது இதயத் துடிப்பு நின்றுபோகவும் வாய்ப்புண்டு... இல்லையா?

'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'யின் முதல் பகுதியில், 'பத்தாயிரம் தாலந்து' கடன்பட்ட பணியாளரின் கடன் தொகை முழுவதையும் அரசன் தள்ளுபடி செய்து, அவரைச் சுதந்திரமாகப் போக அனுமதித்த வேளையில், இதுபோன்ற ஒரு மகிழ்வு அப்பணியாளரை நிறைத்திருக்கவேண்டும். ஆனால், இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் இயேசு விவரிக்கும் காட்சி வித்தியாசமாக அமைந்துள்ளது. இதோ இவ்வுவமையின் இரண்டாம் பகுதி:
மத்தேயு நற்செய்தி 18: 27-30
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தாஎனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

இயேசு இவ்வுவமையில் பயன்படுத்தியுள்ள இரு கடன் தொகைகள், பல விவிலிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று குறிப்பிட்டோம். 'பத்தாயிரம் தாலந்து', 'நூறு தெனாரியம்' என்ற இவ்விரு தொகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'பத்தாயிரம் தாலந்து', கடலளவு நீர் என்றால், 'நூறு தெனாரியம்' கையளவு நீர்!
கடலளவு நீரில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக்கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, வெளியில் இழுத்ததைக் கண்டு நாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். அதே நிம்மதிப் பெருமூச்சை அந்தப் பணியாளரிடமிருந்தும் எதிர்பார்த்தோம். ஆனால், அந்தப் பணியாளர் தான் பெற்ற மூச்சை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்தும் முயற்சியாக, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது அதிர்ச்சி அடைகிறோம். நாம் அடைந்த அதிர்ச்சியை உடன் பணியாளர்களும் அடைந்தனர். தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை இவ்வுவமையின் மூன்றாம் பகுதியில் இவ்வாறு வாசிக்கிறோம்:
மத்தேயு நற்செய்தி 18: 31-34
அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தி, தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாம், உள்ளிழுத்து, வெளிவிடும் சுவாசத்தைப் போல, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த செயல்பாடுகள். ஒன்று குறைந்தால், நோயுறுவோம். மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல... ஒரு பக்கம் மட்டுமே உருவங்கள் பதிந்து, மற்றொரு பக்கம் தேய்ந்துபோயிருந்தால், அந்த நாணயம், மதிப்பில்லாமல் போகும். பத்தாயிரம் தாலந்து கடனிலிருந்து மன்னிப்பு பெற்ற பணியாளர், தான் பெற்ற மன்னிப்பை அடுத்தவருக்குத் தர மறுத்தபோது, அவர் பெற்ற மன்னிப்பும், நோயுற்று, விலை மதிப்பற்று போனது. இதையே, இவ்வுவமையின் இறுதியில் இயேசு இவ்விதம் கூறுகிறார்:
மத்தேயு நற்செய்தி 18: 35
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
இறைவன் நம்மை மன்னிக்க மாட்டார் என்று சொல்வதை விட, நாம் மற்றவர்களை மன்னிக்க முடியாதபோது, அந்த உணர்வு, நம்மை நாமே மன்னிக்க முடியாதவாறு சிறைப்படுத்தும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மன்னிக்க மறுப்பதைக் குறித்து Stephanie என்பவர் சொல்லியுள்ள வார்த்தைகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: "ஒருவரை மன்னிக்க மறுப்பது, நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்" (Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die).

நாம் ஒவ்வொருவரும் சிறுவயது முதல் பல்வேறு சூழல்களில் மன்னிப்பை பெற்று வளர்ந்துள்ளோம். மன்னிப்பினால் பக்குவம் அடையும் நம் உள்ளம் அடுத்தவரையும் மன்னிக்கப் பழகுகிறது. இதற்கு மாறாக, நாம் பெற்றுள்ள மன்னிப்புக்களை மறந்துவிட்டு, அல்லது, மறுத்து, ஒதுக்கிவிட்டு, பகைமையில் நம் மனம் நிறையும்போது, அது ஓர் அமிலத்தைப் போல நம்மைப் புண்ணாக்குகிறது.

1994ம் ஆண்டு, Rwanda நாட்டில் உருவான ஓர் இனக்கலவரத்தில், Tutsi எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்களில், 10 இலட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் இதில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். Hutu இனத்தைச் சார்ந்த 70,000க்கும் மேற்பட்டவர்கள், இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக ஒத்துக்கொண்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு, இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே Tutsi மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர்.
கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த ஒப்புரவை, ‘As We Forgive’ நாங்கள் மன்னிப்பது போல் என்ற ஆவணப் படம் காட்டுகிறது. மனதைச் சங்கடப்படுத்தும் பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் உள்ளத்தை அதிகம் பாதிக்கின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதே போல், அந்தக் கொலையாளிகளும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது மனதைத் தொடும் காட்சிகள். இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள்.

இந்த ஆவணப் படத்தில் ஒருவர் சொல்லும் கூற்றை மட்டும் இங்கு கூற விழைகிறேன். மன்னிப்பைப் பற்றி அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது, எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்த கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."

1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நான்கு மாதங்கள் நிகழ்ந்த இந்த இனப்படுகொலையின் 20ம் ஆண்டு நினைவையொட்டி, ருவாண்டா அரசு, இவ்வாண்டு ஏப்ரல் 7ம் தேதி முதல் நாடெங்கும் ஒரு வாரம் துயரத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தது. அதற்கு முன்னதாக, ஏப்ரல் 3ம் தேதியன்று, 'Ad Limina' என்று சொல்லப்படும் சிறப்பு சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த, ருவாண்டா நாட்டு ஆயர்களைச் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தத்தபோது, ஒப்புரவு என்பது மனித முயற்சியால் மட்டும் உருவாகமுடியாது; அதற்கு இறைவனின் தனிவரம் தேவை என்று கூறினார். ஏப்ரல் 6ம் தேதி, ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நண்பகல் மூவேளை செபத்தை வழிநடத்தியத் திருத்தந்தை, "ருவாண்டா மக்களுக்கு நான் கூறுவது இதுவே: அஞ்சாதீர்கள்! நற்செய்தி என்ற பாறை மீது உங்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்புங்கள். அன்பு, நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த பண்புகளை உங்கள் சமுதாயத்தில் வளர்த்திடுங்கள். அது ஒன்றே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

20 ஆண்டுகள் கடந்தும், தங்கள் சமுதாயத்தில் உருவான பழி உணர்வுகளைத் தீர்க்க முடியாமல் தவிக்கும் ருவாண்டா மக்களுக்கென சிறப்பாக செபிப்போம். அதேபோல், உலகின் பல இடங்களில், பழிக்குப் பழி என்ற அமிலத்தால், தங்கள் உள்ளங்களை நிறைத்து, அழிந்துகொண்டிருக்கும் வன்முறையாளர்கள், தங்கள் தவறை உணர்ந்து, வெறி என்ற அமிலத்திற்குப் பதிலாக, மன்னிப்பு என்ற மருந்தினால் குணம் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். அமைதியின் இளவரசன் இயேசுவின் வருகையைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழாவின்போது, மன்னிப்பு வழங்குவதாலும், பெறுவதாலும் உருவாகும் உண்மையான அமைதியை நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.