2014-12-23 14:26:26

புனிதரும் மனிதரே எரிந்து சாம்பலாயினும், இறைவனுக்கு நன்றி


1755ம் ஆண்டு, கனடா நாட்டின் Quebec நகரில், அருள் சகோதரிகள் சபை ஒன்று துவங்கப்பட்டது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீது இச்சகோதரிகள் தனிக்கவனம் செலுத்தி வந்ததால், அப்பழக்கத்திற்கு அடிமையான பலர், இச்சகோதரிகளின் உதவி தேடி துறவு இல்லத்திற்கு வரும்போது, வாசலில் மயங்கிக் கிடப்பதுண்டு. இத்துறவுச் சபையை விரும்பாத பலர், "மயக்கம் தரும் கன்னியர்" என்ற அவதூறான பட்டத்தை அருள் சகோதரிகள் மீது சுமத்தினர். இருப்பினும், இச்சபையின் அருள் சகோதரிகள் தங்கள் பணியை, மனம் தளராமல் தொடர்ந்தனர். 'பிறரன்புச் சகோதரிகள்' என்ற பெயருடன் துவக்கப்பட்ட இச்சபையை நிறுவியவர், அருள் சகோதரி, மார்கரீத் த யுவீல் (Marguerite d’Youville).
மனித வாழ்வில் ஒருவர் சந்திக்கக்கூடிய பல துன்பங்களை, மார்கரீத் சந்தித்தார். சிறுவயதிலேயே தந்தை இறந்ததால், வறுமையில் வாடியக் குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பள்ளிப் படிப்பை நிறுத்தினார் மார்கரீத். நெறி தவறியக் கணவனையும், கொடுமைப்படுத்தும் மாமியாரையும் திருமணத்தின் வழியே உறவாகப் பெற்றார். இவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில், நால்வர், குழந்தைப்பருவத்திலேயே இறந்தனர்.
இத்தனைத் துன்பங்கள் நடுவிலும், 1727ம் ஆண்டு, மார்கரீத் அவர்களுக்கு, இறைவனின் அன்பை உணரும் தனிவரம் கிடைத்தது. 1730ம் ஆண்டு, தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு, தன் வாழ்வைப் பிறரன்புப் பணிகளுக்கு அர்ப்பணித்தார், மார்கரீத்.
அவர் உருவாக்கிய துறவுச் சபை, ஆதரவின்றி கைவிடப்பட்டப் பெண்களுக்கென ஓர் இல்லத்தை நடத்தி வந்தது. அந்த இல்லம், 1745ம் ஆண்டு, தீயில் எரிந்து சாம்பலானது. அந்தச் சாம்பலுக்கு நடுவே முழந்தாள்படியிட்டு, மார்கரீத் அவர்கள், 'Te Deum' என்ற நன்றிப்பாடலைப் பாடினார்.
'பிறரன்புச் சகோதரிகள்' என்ற பெயரில் இவர் உருவாக்கியத் துறவுச் சபையின் சகோதரிகள் சாம்பல் நிறத்தில் துறவு உடை அணிந்திருந்ததால், 'சாம்பல் சகோதரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். 1771ம் ஆண்டு இறைவனடி சேர்ந்த புனித மார்கரீத் த யுவீல் அவர்களின் திருநாள், டிசம்பர் 24ம் தேதி நினைவுகூரப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.