2014-12-23 15:25:46

அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை மடல்


டிச.23,2014. உலகில் இடம்பெறும் ஆயுத வர்த்தகத்துக்கு மீண்டும் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை, மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுவதற்கு திட்டங்களும், முயற்சிகளும் தேவைப்படுகின்றன, இதன்மூலம், அப்பகுதியின் பிரச்சனைகளுக்கு உலக அளவில் ஒரு தீர்வு எட்டப்படும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு நீண்ட மடல் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்கள் எவ்வளவு காலத்துக்கு அமைதியின்றி துன்புறுவார்கள் என்ற கேள்வியை எழுப்பி, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் நடவடிக்கை வழியாக, அமைதியை ஊக்குவிக்குமாறு அனைத்துலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, தங்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இம்மக்கள் மீண்டும் திரும்பி வந்து மாண்புடனும் பாதுகாப்புடனும் வாழ வழி செய்யப்படுமாறும், இவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டுமென்றும் தனது மடலில் கேட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களின் இருப்பும் பணியும் அப்பகுதிக்கும், திருஅவைக்கும் விலைமதிப்பற்றது என்றும், இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் இவர்களின் சாட்சிய வாழ்வுக்கும், அதேநேரம் தனக்காக இவர்கள் செய்யும் செபத்துக்கும் நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அப்பகுதியில் புதிதாக முளைத்துள்ள பயங்கரவாத அமைப்பினால் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ளும் கடும் வேதனைகளைக் குறிப்பிட்டு, தங்களின் செயல்களை நியாயப்படுவதற்கு மதம் பயன்படுத்தப்படுவதை எல்லா மதத் தலைவர்களும் ஒரே மனதாக, ஐயத்துக்கு இடமின்றி தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இஸ்லாம் அமைதியின் மதம், மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும், அனைவருக்கும் அமைதியான இணக்கமான வாழ்வையும் இம்மதம் ஏற்கின்றது, இதனை உடன்வாழும் முஸ்லிம்கள் உணர்ந்து வாழ்வதற்கு, பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் திருத்தந்தையின் இம்மடல் கூறுகின்றது.
பிற மதத்தவரோடும், யூதர்களோடும், முஸ்லிம்களோடும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ள அதேவேளை, உண்மையிலும் அன்பிலும் பிற மதத்தவரோடு உரையாடலில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இப்பகுதியில் அனைத்துக் கிறிஸ்தவச் சபைத் தலைவர்களுக்கிடையே நிலவும் நல்ல உறவுகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இளையோர், வயதானவர்கள் என ஒவ்வொரு வயதினரையும் குறிப்பிட்டு, தனது தனிப்பட்ட நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.