2014-12-22 16:31:29

திருப்பீடப் பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை


டிச.22,2014. இத்திங்கள் காலை, முதலில், திருப்பீட உயர் அதிகாரிகளைச் சந்தித்தபின், திருப்பீட அமைப்புகளில் பணிபுரிவோரையும் அவர்களின் குடும்பத்தினரையும், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
உடலுக்கு ஒவ்வோர் உறுப்பும் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வாறே திருப்பீடத்தின் பணியாளர்கள் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குணப்படுத்தல் என்பதை இன்றைய சந்திப்பின் தலைப்பாக எடுத்துக்கொண்டு உரையாற்றினார்.
ஒரு தாய், கண்ணுறக்கமின்றி, தன் நோயுற்ற குழந்தையை பராமரிப்பது போன்று உங்களின் பணி அர்ப்பணிப்பு இருக்கவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, குணப்படுத்தும் பாதையில் ஒவ்வொருவரின் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு பணியாளரும் தன் ஆன்மீக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, தன் குடும்பத்திற்கும் நேரம் செலவழித்து அன்பையும் அக்கறையையும் செலுத்தவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் விசுவாசத்தின் துணைகொண்டு ஏழைகளுக்கு உதவுதல், நல்சொற்களையே பேசுதல், பிறருக்கு மன்னிப்பை வழங்குதல், அர்ப்பணத்துடன் பணியாற்றுதல், எதிர்மறை எண்ணங்களைக் கைவிடல், மற்றவரைக் குறைக்கூறாதிருத்தல் என பல்வேறு நல்விடயங்களுக்கும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழலில் திருப்பீடத்தில் நிலவும் சில தவறுகளுக்காக மன்னிப்பு வேண்டுவதாகவும் கேட்டுக்கொண்டு, தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.