2014-12-22 16:31:36

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார்


டிச.22,2014. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன்வரும் இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கிறிஸ்து பிறப்பின்போது இயேசு வந்து நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார், அவர் திரும்பிச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
நம் இதயக் கதவுகளைத் தட்டும் இயேசுவுக்கு அவற்றைத் திறந்துவிடுவோம் என விண்ணப்பித்தத் திருத்தந்தை, நம்மீது கொண்ட அன்பினால் நம் சகோதரராக மாறிய இயேசுவுக்கு நம் உள்ளங்களைத் திறக்க வேண்டும் என்பதில் அன்னைமரியாவும், தூய யோசேப்பும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் எனவும் கூறினார்.
இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டபோது, தான் எடுக்க வேண்டிய பாதை தெளிவாகத் தெரியவில்லை எனினும், நான் ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று அன்னைமரியா உரைத்தது, அவரின் திறந்த மனதைக் காண்பிக்கிறது என்றுரைத்த திருத்தந்தை, அன்னைமரியா, கடவுளின் காலத்தைப் புரிந்துகொள்பவராகவும் இருந்தார் என்று கூறினார்.
பலமுறை நம்மிடமும் வானதூதர்களை இயேசு அனுப்பியுள்ளார், பலமுறை அவரே நம் இதயக்கதவருகே வந்து தட்டியுள்ளார், ஆனால் நம் உலகக் கவலைகளால் அவற்றை உணராமல் விட்டுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய யோசேப்பின் அமைதியான வாழ்வும், அவரின் திறந்த மனதும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.