2014-12-20 16:13:05

ரேபிப்பியா சிறைக் கைதிகளுக்குத் திருத்தந்தையின் பரிசு


டிச.20,2014. டிசம்பர் 21, இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் ரேபிப்பியா சிறைச்சாலை சென்று திருப்பலி நிறைவேற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் ஒரு சிறிய பரிசை அளிக்கவுள்ளார் திருத்தந்தையின் பெயரில் தர்மச் செயல்கள் ஆற்றும் அதிகாரி ஒருவர்.
திருத்தந்தையின் பெயரில் தர்மச் செயல்கள் ஆற்றும் பேராயர் Konrad Krajewski அவர்கள், இஞ்ஞாயிறன்று, ரேபிப்பியா சிறைச்சாலையில் திருப்பலி நிறைவேற்றி, ஒரு சிறிய செபப் புத்தகத்தை திருத்தந்தையின் பெயரில் பரிசாக அளிப்பார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“செபிக்கும்போது இறைவன் என்னில் மூச்சு விடுகிறார்...” (Quando prego, Dio respira in me) என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளால் தொடங்கும் இத்தாலிய மொழியிலான செபப் புத்தகம் கடந்த ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இந்தச் செபப் புத்தகமே கைதிகளுக்கு வழங்கப்படும்.
ரேபிப்பியா சிறைச்சாலையில் உள்ள 2,100 ஆண்கள், 350 பெண்கள் என 2,500 கைதிகளில் 38 விழுக்காட்டினர் வெளிநாட்டவர். இப்பெண் கைதிகளுடன் மூன்று வயதுக்குட்பட்ட இருபது குழந்தைகளும் உள்ளனர். இக்கைதிகளில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், நோயாளிகள் மற்றும் பலருக்குக் குடும்பங்களும் கிடையாது.
மேலும், உரோம் ரெஜினா சேலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு, கடந்த ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று பேராயர் Konrad Krajewski அவர்கள், திருத்தந்தையின் பெயரில் ஒரு சிறிய நற்செய்தி நூலை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.