2014-12-20 14:12:16

புனிதரும் மனிதரே - 20,000 மைல்கள், பல்லாயிரம் உள்ளங்கள்


"மிக அதிகமானப் பணிகள் உனக்கிருந்தால், கடவுளின் உதவியோடு, அவை அனைத்தையும் செய்வதற்குரிய நேரத்தை நீ கண்டுபிடிப்பாய்" ("If you have too much to do, with God’s help you will find time to do it all") என்று கூறியவர், புனித பீட்டர் கனீசியுஸ் (St Peter Canisius). தன் கூற்றுப்படியே, அவர் வாழ்வில் மிக அதிகமானப் பணிகளை நிறைவேற்றியவர்.
16ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக எழுந்த, லூத்தர் அவர்களின் ஆதரவு அலை, முழுவீச்சில் பரவிக் கொண்டிருந்த வேளையில், ஆஸ்திரியா, பவேரியா, பொஹிமியா ஆகியப் பகுதிகளில் கத்தோலிக்க மறுமலர்ச்சியை உருவாக்கியவர், பீட்டர் கனிசியுஸ். இந்த மறுமலர்ச்சிக்கென அவர் உருவாக்கிய கத்தோலிக்க மறைக்கல்வி நூல், இன்றளவும் திருஅவையில் ஒரு கருவூலமாகக் கருதப்படுகிறது.
1521ம் ஆண்டு பிறந்த பீட்டர், அறிவுத்திறனில் சிறந்து விளங்கியதால், அவர் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று அவர் தந்தை விரும்பினார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, இளையவர் பீட்டர் சட்டவியலைக் கற்றுத் தேர்ந்தார். எனினும், வழக்கறிஞராக வாழ்வதில் தனக்கு உண்மையான மகிழ்வு கிடைக்காது என்பதை அவர் உணர்ந்தார்.
அவ்வேளையில், இயேசு சபையைச் சேர்ந்த புனித Peter Faber அவர்களின் மறையுரையைக் கேட்கும் வாய்ப்பு, இளையவர் பீட்டருக்குக் கிடைத்தது. விரைவில் அவர் இயேசு சபையில் இணைந்தார். பீட்டர் அவர்களின் திறமைகளைக் கண்ட புனித இலோயோலா இஞ்ஞாசியார் அவர்கள், இளம் அருள் பணியாளரான அவரை ஜெர்மனியில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.
50 ஆண்டளவாய் அந்நாட்டில் அயராமல் உழைத்தார், பீட்டர். தன் பணிக்காலத்தின் இறுதி 30 ஆண்டுகளில் அவர் நடைப்பயணமாகவும், குதிரை மீதும், 20,000 மைல்களுக்கு மேல் பயணித்து, பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் கொணர்ந்தார்.1591ம் ஆண்டு, முடக்குவாத நோயால் தாக்கப்பட்ட பீட்டர் அவர்கள், சாகும் நிலையில் இருந்தார். மீண்டும் நலம்பெற்று, மேலும் 6 ஆண்டுகள் அயராமல் பணியாற்றி, 1597ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். புனித பீட்டர் கனீசியுஸ் அவர்கள், திருஅவையின் மறைவல்லுனர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.