2014-12-20 16:13:32

சாந்தா கிளாஸ் தாத்தாவுக்கு இலட்சக்கணக்கில் சிறார் கடிதங்கள்


டிச.20,2014. கிறிஸ்மஸ் நெருங்கிவரும் வேளையில், சாந்தா கிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தாவுக்கும், அவரின் உதவியாளர்களுக்கும் உலகெங்கிலுமிருந்து சிறார்கள் அனுப்பியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் எழுபது இலட்சத்துக்கு அதிகமாகியுள்ளது என்று ஐ.நா. தபால்துறை நிறுவனம் கூறியது.
UPU என்ற உலகளாவிய தபால் கழகம் இவ்வாரத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கானடா மற்றும் பிரான்சில் இக்கடிதங்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
பார்வையற்றவர் பயன்படுத்தும் ப்ரெயில் எழுத்துமுறை உட்பட முப்பது மொழிகளில் கானடா சாந்தா கிளாஸ் தாத்தா இக்கடிதங்களுக்குப் பதில் அனுப்பியுள்ளார் எனவும், போர்த்துக்கல் நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் நலிந்த சிறார் கிறிஸ்மஸ் தாத்தாவிடமிருந்து பரிசுகளைப் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொம்மைகள் கேட்டு எழுதும் கடிதங்களே அதிகம் எனினும், ஆடைகள், செல்லப் பிராணிகள், ஏன் சகோதர சகோதரிகளைக் கேட்டுக்கூட சிறார் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.