2014-12-19 16:16:03

பூமிக்கடியில் நூறு கோடி ஆண்டுகள் பழமையான நீர்


டிச.19,2014. பூமிக்கு கீழே மிகவும் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் காணப்படுகின்ற உலகின் மிகப் பழமையான தண்ணீர், நாம் ஏற்கனவே நினைத்ததைவிட மிகவும் அதிகமான அளவுகளில் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
கானடா நாட்டு டொரென்டோ பல்கலைக்கழக ஆய்வாளர் Barbara Sherwood Lollar தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வு முடிவுகள் Nature என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு, San Franciscoவில் நடைபெற்ற அமெரிக்க புவியியல் கழகக் கூட்டத்திலும் இந்த ஆய்வுகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே பத்து இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்தப் பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். அதாவது உலகிலுள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் இருக்கின்ற நீரைவிட புவியின் மேற்பரப்புக்கு மிக ஆழத்தில் இருக்கின்ற இந்தப் பழைய தண்ணீரின் அளவு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் இந்தத் தண்ணீர் இருந்தும், தண்ணீருக்கும் பாறைகளுக்கும் இடையே நடக்கின்ற வேதிய மாற்றங்களால் ஹைட்ரஜன் வாயு உருவாவதையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தண்ணீர் மிகவும் அதிகமான உப்புத்தன்மை கொண்டுள்ளது என்றும் அதில் யாரும் விழுந்தால் சாவுக் கடலைப் போல மிதப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பழமையான தண்ணீர் இதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது.

கானடாவில் பூமிக்கு அடியில் ஏறக்குறைய இரண்டரை கிலோமீட்டர்கள் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட தண்ணீர் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் காட்டியுள்ளன.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.