2014-12-19 16:15:22

திருத்தந்தை, இத்தாலிய தேசிய ஒலிம்பிக் கழகத்தினர் சந்திப்பு


டிச.19,2014. இத்தாலிய தேசிய ஒலிம்பிக் கழகத்தின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அக்கழகத்தோடு தொடர்புடையவர்கள் என, ஐந்தாயிரம் பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த நூறு ஆண்டுகளாக இக்கழகத்தினர் ஆற்றிவரும் நற்பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.
2024ம் ஆண்டின் உலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை உரோமையில் நடத்துவதற்கு இக்கழகம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு, தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, பன்மைத்தன்மையில் நல்லிணக்கம், சகிப்பு, ஒருவர் ஒருவரை மதித்தல் ஆகிய செயல்கள் மூலமாக, நாடுகள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் இவ்விளையாட்டுகள் வளர்த்து வருகின்றன என்றும் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுகள், மக்கள் மத்தியிலும் தோழமை மற்றும் உடன்பிறப்பு உணர்வை வளர்க்கும் உலகளாவியப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்றும், இப்பண்புகளை வளர்ப்பதற்கு இத்தாலிய ஒலிம்பிக் கழகத்தினர் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
விளையாட்டு, இலாப நோக்கம் கொண்டதல்ல, மாறாக, நன்றியுணர்வோடு மனித முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டியதாகும் என்று கூறிய திருத்தந்தை, விளையாட்டு, சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் உட்பட எல்லாருக்கும் உரியதாக அமைக்கப்படுமாறும் பரிந்துரைத்தார்.
1914ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட CONI எனப்படும் இத்தாலிய தேசிய ஒலிம்பிக் கழகம், பன்னாட்டு ஒலிம்பிக் கழகத்தின்(IOC) உறுப்பினராகவும் உள்ளது. CONI கழகத்தில் 95 ஆயிரம் விளையாட்டு அமைப்புகள் உள்ளன. இதில் 1,10,00,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.