2014-12-19 15:18:18

டிச.20,2014. புனிதரும் மனிதரே : ஆறு வயதிலேயே துறவியாக ஆசைப்பட்டவர் (St. Michael de Sanctis)


1591ம் ஆண்டு இஸ்பெயினின் கத்தலோனியாவில் பிறந்த புனித மைக்கேல் தெ சாங்திஸ் என்பவர், தன் 6வது வயதிலேயே துறவியாகும் ஆவலை வெளிப்படுத்தினார். ஆனால் இவர் பெற்றோரோ, இவரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தினர். அசிசியின் புனித பிரான்சிஸ்போல் வாழ விரும்பிய மைக்கேல் தெ சாங்திஸ், தன் பெற்றோரின் இறப்பிற்குப்பின், தன் 12ம் வயதில் பர்ச்சலோனாவின் டிரினிட்டேரியன் துறவுசபையில் இணைந்து நவத்துறவியாகி வார்த்தைப்பாடுகளையும் எடுத்தார். காலணிகள் அணியாத, மூவொரு இறைவன் துறவுச்சபையைச் சேர்ந்த ஒருவரை, ஒருநாள் சந்தித்த தெ சாங்திஸ், அவர்களின் கடுமையான தவ வாழ்வுமுறைகளால் கவரப்பட்டு, தன் துறவுசபை அதிபர்களின் அனுமதியோடு அத்துறவுசபையில் இணைந்து நவத்துறவியாகி, குருவாகவும் அருள்பொழிவுச் செய்யப்பட்டார். Valladolid துறவு இல்ல அதிபராக இருமுறைத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், திருநற்கருணைமீது அளவற்ற பக்திக் கொண்டவராக இருந்தார். இவரின் வாழ்வு பல துறவிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.
1625ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி, தன் 35ம் வயதில் இறையடி சேர்ந்த மைக்கேல் தெ சாங்திஸ் அவர்களை, 1862ம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள், புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.