2014-12-19 16:15:36

கியூப-அமெரிக்க உறவு, நம்பிக்கையின் புதிய எல்லைகளைச் சுடர்விடச் செய்துள்ளது


டிச.19,2014. கியூபா நாட்டுடன் அமெரிக்க ஐக்கிய நாடு அரசியல் உறவுகளை உறுதிப்படுத்தும் என்று அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் தெரிவித்துள்ளது, கியூப மக்கள் வாழ்வில் நம்பிக்கையின் புதிய எல்லைகளைச் சுடர்விடச் செய்துள்ளது என்று கியூபா நாட்டு ஆயர்கள் தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் மத்தயில் பதட்டநிலைகள் இல்லாத நல்ல உறவுகள், நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்துக்கு அடித்தளமாக உள்ளன என்றுரைத்துள்ள ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெளிப்படுத்திய நல்லெண்ணம், கியூப மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீக நலன்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர் கியூபா ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபா நாடும், தங்கள் மக்களின் நன்மைகளை மனதில் கொண்டு, தூதரக உறவுகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள கியூபா ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருந்த கியூபாவும், அமெரிக்க ஐக்கிய நாடும் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர் தங்களுக்கிடையே உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள தற்போது முயற்சி எடுத்துள்ளன. உறவுகளை எளிதாக்கும் நோக்கில், இவ்விரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளன.
கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, கியூபாவைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.