2014-12-18 15:46:12

பாகிஸ்தானில் நிலவும் கொடுமைகளை நீக்க அனைவரும் இணைய வேண்டும் - ஆயர் Rufin Anthony


டிச.18,2014. குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கொலை செய்துள்ள தீவிரவாதச் செயலை, உலகமே கண்டனம் செய்துள்ளது; பாகிஸ்தானில் நிலவும் வேற்றுமைகளையெல்லாம் தாண்டி, இந்தக் கொடுமையை நீக்க அனைவரும் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
பெஷாவர் நகரில் இராணுவப் பள்ளியொன்றில் நடைபெற்ற படுகொலையில் இறந்தவர்களுக்காக இப்புதன் இரவு நடைபெற்ற ஒரு செப வழிபாட்டை முன்னின்று நடத்திய இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர், Rufin Anthony அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள், தங்கள் கோழைத்தனத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும் வெளியிட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நீதி, அமைதி குழுவின் இயக்குனர், அருள்பணி Emmanuel Yousaf Mani அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
தன் புதன் பொது மறைக்கல்விக்குப் பின் பெஷாவார் படுகொலையைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையாளர்களின் செயல்பாடுகள் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை என்று கவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
தாலிபான் தாக்குதலில் காயமடைந்து குணமாகி, அண்மையில் உலக அமைதி நொபெல் விருதைப் பெற்ற இளம்பெண் மலாலா அவர்கள், இக்கொடுமை தன் மனதை சுக்குநூறாகச் சிதைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / VIS








All the contents on this site are copyrighted ©.