2014-12-18 15:39:14

சிறுவர் சிறுமியரிடம் திருத்தந்தை : அமைதியின் திருத்தூதர்களாக வாழுங்கள்


டிச.18,2014. உங்கள் குடும்பங்களில் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோரில் துவங்கி, உங்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் அமைதியின் திருத்தூதர்களாக வாழுங்கள் என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த சிறுவர் சிறுமியருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்தாலிய கத்தோலிக்கப் பணி (Italian Catholic Action) என்ற ஓர் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் ஆற்றக்கூடிய ஐந்து செயல்களைச் சுருக்கமாகக் கூறினார்.
மனம் தளராமல் செயலாற்றுதல், வறியோர், துன்புறுவோர் மீது அக்கறை காட்டுதல், திருஅவை மீது அன்புகொள்ளுதல், அமைதியின் தூதர்களாகச் செயலாற்றுதல், இயேசுவிடம் பேசுதல் ஆகிய ஐந்து செயல்களை கடைபிடிக்குமாறு திருத்தந்தை அறிவுறுத்தினார்.
"அனைத்தையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கே" என்ற கருத்தை, அச்சிறுவர், சிறுமியர் வரும் ஆண்டின் விருதுவாக்காகத் தேர்ந்துள்ளது குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் தேடல்களில் இயேசுவும் உடன் வருகிறார் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்று கூறினார்.
"இதோ வருகிறேன்" என்று அன்னை மரியா சொன்னதைப் போல, இத்தாலிய கத்தோலிக்கப் பணி அமைப்பைச் சார்ந்த சிறுவர், சிறுமியரும் இறைவனின் குரல் கேட்டு, செயலாற்ற முன்வரவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, 'அருள் நிறைந்த மரியே வாழ்க' என்ற செபத்தை அனைவரோடும் செபித்து, அவர்களுக்குத் தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.