2014-12-18 15:32:22

அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபாவும் தூதரக உறவுகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவு குறித்து திருத்தந்தையின் மகிழ்ச்சி


டிச.18,2014. அமெரிக்க ஐக்கிய நாடும், கியூபா நாடும், தங்கள் மக்களின் நன்மைகளை மனதில் கொண்டு, தூதரக உறவுகளை மேற்கொள்ள எடுத்துள்ள முடிவு தன்னை பெரிதும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இப்புதனன்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில், இக்குறிப்பை, செய்தியாளர்களுக்கு வெளியிட்டார்.
கடந்த சில மாதங்களில், கியூபா அரசுத் தலைவர் Raúl Castro அவர்களுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கும் திருத்தந்தை அனுப்பியுள்ள மடல்களில், இவ்விரு நாடுகளின் தூதரக உறவுகள் குறித்து திருத்தந்தை விண்ணப்பித்திருந்தார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.
இவ்விரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் திருப்பீடத்தில் சந்தித்து, உரையாடல்களை மேற்கொண்டதையும் கர்தினால் பரோலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு நாடுகளும் தங்கள் உறவுகளை மேலும் உறுதிப்படுத்த, திருப்பீடம் அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்கும் என்று, திருப்பீடச் செயலர் வெளியிட்டுள்ள குறிப்பில் காணப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே 1962ம் ஆண்டு, அக்டோபர் மாதம் உருவான கருத்து வேறுபாடுகளில், சோவியத் ஒன்றியம், கியூபாவிற்கு ஏவுகணைகளை அனுப்பிவைத்தது, மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியது.
இந்த ஆபத்தானச் சூழலைத் தொடர்ந்து, கியூபா நாட்டிற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் உறவுகள் முறிந்து, அந்நாட்டின் மீது அமெரிக்க ஐக்கிய நாடு கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்தது என்பது வரலாற்றுக் குறிப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.