2014-12-17 15:53:03

புனிதரும் மனிதரே : அரசருக்கு அடிபணியாதவர் ( St. Dominic of Silos)


கி.பி.ஆயிரமாம் ஆண்டுவாக்கில் இஸ்பெயினின் Navarre மாநிலத்தில் Canas என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தோமினிக். இவர் San Millan de Ia Cogolla என்ற இடத்திலிருந்த பெனடிக்ட் துறவு ஆதீனத்தில் துறவறம் பூண்டார். அப்போதைய Navarre அரசர் மூன்றாம் Garcia என்பவர் இத்துறவு ஆதீனத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். ஆனால் துறவி தோமினிக், அரசரைக் கடுமையாய் எதிர்த்தார். அரசரின் அநீதச் செயல்களுக்காகத் துணிந்து போராடினார். இதனால் இவரையும், இவரோடு வாழ்ந்த மற்ற துறவிகளையும் அரசர் நாடு கடத்தினார். எங்கு செல்வது என்று அறியாது செபித்தார் துறவி தோமினிக். அப்போது அத்துறவிகளுக்கு, Castile-Leon அரசர் முதலாம் Ferdinand அடைக்கலம் அளித்தார். அதோடு Silos நகரில் சீர்குலைந்திருந்த புனித செபஸ்தியார் ஆதீனத்தையும் அத்துறவிகளிடம் ஒப்படைத்தார் அரசர் முதலாம் Ferdinand. மேலும், அந்த ஆதீனத்துக்கு, தோமினிக் அவர்களைத் தலைவராகவும் ஏற்படுத்தினார் அரசர். தற்போது புனித செபஸ்தியார் ஆதீனம், புனித தோமினிக் ஆதீனம் என்றழைக்கப்படுகிறது. அந்த ஆதீனத்தைச் சீரமைத்து அதன் வளர்ச்சிக்காகக் கடுமையாகப் பாடுபட்டார் தோமினிக். புத்தகங்களை வடிவமைப்பதற்கும், பொன், வெள்ளி வேலைகளுக்கும் உரிய இடமாக அதனை மாற்றினார். மூர் இனத்தவர், மக்களை அடிமைகளாக இழுத்துச்சென்று சிறையில் அடைத்த கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்டார். அந்த அடிமைகளை மீட்பதற்காக நன்கொடைகள் திரட்டி, அந்நிதியைக் கொண்டு, அவர்களை அடிமைமுறையிலிருந்து மீட்டார். இஸ்பெயின் மக்களால் மிகவும் போற்றப்படும் புனிதர்களில் ஒருவராகிய சீலோஸ் நகர் புனித தோமினிக், மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். சீலோஸ் புனித தோமினிக், கைதிகள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் இடையர்களுக்குப் பாதுகாவலர். இப்புனிதர் 1073ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி இறந்தார். ஆறு துறவிகளுடன் தொடங்கப்பட்ட அந்த ஆதீனத்தில் அவர் இறந்தபோது நாற்பது துறவிகள் இருந்தனர். இப்புனிதரின் விழா டிசம்பர் 20.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.