2014-12-17 15:56:15

அமைதி ஆர்வலர்கள் – 1965ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது(UNICEF)


டிச.17,2014. 1965ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் நிதியமான யூனிசெப் பெற்றது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்விருதைப் பெற்றுள்ளது. 1965ம் ஆண்டில் இவ்விருதை அறிவித்த நார்வே நொபெல் அமைதி விருதுக் குழு, ஆல்பிரட் நொபெல் அவர்களின் உயிலின்படி, “யூனிசெப் நிறுவனம், நாடுகள் மத்தியில் உடன்பிறப்பு உணர்வை ஊக்குவித்து வருகிறது, உலகத் தளத்தில் அமைதியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது” எனப் பாராட்டியது. அச்சமயத்தில் இவ்விருதைப் பெற்று உரையாற்றிய யூனிசெப் நிறுவன இயக்குனர் Henry R. Labouisse அவர்கள், “அமைதியின் பெயரில் அதிகளவில் முயற்சிகளை எடுப்பதற்கு இவ்விருது உந்துதலாக உள்ளது, இவ்விருது யூனிசெப் நிறுவனப் பணியாளர்க்கு புதிய சக்தியைக் கொடுத்துள்ளது, இன்றையச் சிறார் பயனுள்ள மற்றும் மகிழ்வான குடிமக்களாக வளருவதற்கு யூனிசெப் உதவி வருகிறது” என்று கூறினார்.

யூனிசெப் நிறுவனம், இரண்டாம் உலகப்போரில் கடும் அழிவை எதிர்கொண்ட நாடுகளில் உள்ள சிறார்க்கு உணவு மற்றும் நலவாழ்வு வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1946ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையினால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், முதலில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பன்னாட்டுச் சிறார் அவசரகால நிதியம்(United Nations International Children's Emergency Fund: UNICEF), அதாவது யூனிசெப் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் இது 1953ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிரந்தர அமைப்பாகி, ஐக்கிய நாடுகளின் சிறார் நிதியம் என பெயர் மாற்றம் பெற்றது. எனினும், இதன் முன்னையப் பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யூனிசெப் என்றே இன்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. யூனிசெப் நிறுவனம், வளரும் நாடுகளின் தாய்-சேய் தொடர்பான வசதி வாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிறுவனம், தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது. யுனிசெஃப் நிறுவனம், 155 நாடுகளில் ஐந்து முக்கிய இலக்குகளுடன் பணியாற்றி வருகின்றது.

சிறுமிகளின் கல்வி, நோய்களுக்குத் தடுப்பூசி வழங்கல் (Immunisation), எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்த் தடுப்பு, சிறாரின் பாதுகாப்பு, குழந்தைப் பருவம் (Early childhood) ஆகியவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது யூனிசெப். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், 1946ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரையுள்ள காலத்தில் உலகில், குறிப்பாக ஐரோப்பாவில், சிறாருக்குத் தேவையான உணவு, உடை, நலவாழ்வு ஆகியவற்றில் "அவசரகால அணுகுமுறையை"க் கையாண்டது. ஐம்பது இலட்சம் சிறாருக்கு பல்வேறு உடைகளையும், எண்பது இலட்சம் சிறாருக்கு காசநோய்த் தடுப்பு ஊசிகளையும், பால் விநியோகத்தையும், இப்பணிகளின் உச்சகட்டமாக, ஐரோப்பாவில் இலட்சக்கணக்கான சிறாருக்குத் தினமும் உணவு வழங்கி வந்தது. இவ்வுதவிகளுக்கு 11 கோடியே 20 இலட்சம் டாலரைச் செலவு செய்தது யூனிசெப்.
1951ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரையுள்ள காலத்தில் தொடர்ந்து அவசரகால நிலையில் உதவிகளை ஆற்றி வந்தது யூனிசெப். அதேநேரம், இதைப் பெரிய அளவிலும் செய்தது.காசநோய், தொழுநோய், மலேரியா, yaws என்ற தொற்றுத் தோல்நோய் போன்றவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்தி அதற்கேற்ற நலவாழ்வுச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தது.தாய்-சேய் நலக்கல்வியை ஊக்குவித்து, சிறாரின் ஊட்டச்சத்துணவின் தரத்தையும் மேம்படுத்தியது. புரோட்டின் சத்து அதிகமாக உள்ள உணவுப்பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றைக் குறைந்த விலையில் விற்பதற்கும் நாடுகளை ஊக்குவித்தது. இவற்றைப் பயன்படுத்துவது பற்றியும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது. வீட்டுச்சூழலையும், குழந்தை பராமரிப்பையும் முன்னேற்றுவதற்கும், சிறாருக்கு சமூக நலவாழ்வை வழங்குவதற்கும், தாய்மார்க்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தினசரிப் பராமரிப்பு மையங்கள், குடும்ப உளவியல் மையங்கள், இளையோர் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றையெல்லாம் 15 கோடி டாலர் செலவில் செய்தது யூனிசெப்.

1961ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையுள்ள காலத்தில் நாட்டை முன்னேற்றுவதற்கு, சிறாருக்கு உதவுவதல் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியது யூனிசெப் நிறுவனம். தேசியக் கொள்கைக் கூறுகள், சிறாருக்கு உதவித் திட்டங்கள் இவை இரண்டுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி, ஒவ்வொரு நாடும் சிறாரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முன்னுரிமை கொடுக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இத்திட்டம், "நாட்டு அணுகுமுறை" என அழைக்கப்பட்டது. இம்மாதிரியான திட்டங்களை முப்பது கோடி டாலர் செலவில் செய்தது யூனிசெப். மேலும், 1970களின் பத்தாண்டுகளில் வளரும் நாடுகளில் சிறாரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. இதற்கு அந்தந்த அரசுகளில் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் ஊக்குவித்தது. இந்த உதவிகளை ஆண்டுக்கு 10 கோடி டாலர் செலவில் நடத்தியது. இதை பன்னாட்டு மற்றும் அரசு-சாரா நிறுவனங்களின் ஆதரவுடன் செய்தது யூனிசெப்.

யூனிசெப் நிறுவனத்தின் 25 வருட வரலாற்றில் மிகச் சிறந்த பணிகள் இடம்பெற்றுள்ளன. 71 கோடிச் சிறார், trachoma கண்ணிமைப்பு நோய்க்குப் பரிசோதனை செய்யப்பட்டு, 43 கோடிச் சிறார் சிகிச்சை பெற்றுள்ளனர்; 42 கோடியே 50 இலட்சம் சிறார் yaws தோல் தொற்று நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டு, 23 கோடிச் சிறார் அந்நோய்க்குச் சிகிச்சை பெற்றுள்ளனர்; 40 கோடிச் சிறார்க்கு, காசநோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான சிறார் மலேரியாவிலிருந்தும், 4 இலட்சத்து 15 ஆயிரம் சிறார் தொழுநோயிலிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர். 85 நாடுகளில் 12 ஆயிரம் கிராம நலவாழ்வு மையங்களையும் ஆயிரக்கணக்கான குழந்தை பிறப்பு மையங்களையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. 2,500 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 56 ஆயிரம் ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகள், 965 தொழிற் பயிற்சிப் பள்ளிகள், நான்காயிரம் சத்துணவு மையங்களுக்குக் கருவிகள், சத்துணவு பற்றி 600 பேருக்குப் பயிற்சி, 3.,000 பெண்கள் கழகங்கள்... வெள்ளம், நிலநடுக்கம், பிற இயற்கைப் பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவசரகால உதவி... இப்படி பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது யூனிசெப்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.