2014-12-17 16:27:10

Sandy Hook பள்ளியில் நடைபெற்ற படுகொலைகளின் இரண்டாம் ஆண்டு நினைவு


டிச.17,2014. உறவுகளின் மரணம் கண்டு, நம்பிக்கை இழக்கும் வேளையில், துயரம், கோபம், என்ற உணர்வுகள் நம்மை தூக்கி நிறுத்துவதில்லை, மாறாக, நமது விசுவாசமே நம்மை தூக்கி நிறுத்துகிறது என்று அமெரிக்காவில் வாழும் ஒரு கத்தோலிக்கத் தாய் கூறினார்.
2012ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, அமேரிக்காவின் Connecticut மாநில Newtown நகரைச் சேர்ந்த, Sandy Hook பாலர் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான 19 குழந்தைகளில், Dylan என்ற ஆறுவயது மகனை இழந்த Nicole Hockley என்ற இளம் தாய், அந்தப் படுகொலைகளின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இறந்துபோன குழந்தைகளின் நினைவாக, Newtown நகரைச் சேர்ந்தவர்கள், Sandy Hook Promise என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பக்குவப்பட்ட மனநிலையில் இளையோரை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்றுள்ள பல துப்பாக்கிச் சூடு கொலைகளில், 4 விழுக்காடு கொலைகளே, மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நடத்தப்பட்டுள்ளன என்றும், ஏனைய கொலைகள் அனைத்தும், வீட்டுச் சூழல்களால் மன அமைதி இழந்தவர்களால் நடத்தப்பட்டுள்ளன என்றும் இளம் தாய் Hockley அவர்கள் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.
Sandy Hook பள்ளியில் நடைபெற்ற படுகொலைகளின் காரணமாக, இரண்டு ஆண்டுகள் சென்றும், 800க்கும் அதிகமான குழந்தைகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.