2014-12-16 15:28:12

மக்களாட்சியைக் காக்க வாக்களியுங்கள், இலங்கை பல்கலைக்கழகத்தினர்


டிச.16,2014. இலங்கையில் வருகிற சனவரி 8ம் தேதி நடக்கவுள்ள அரசுத்தலைவர் தேர்தலில், முக்கிய மக்களாட்சிச் சீர்திருத்தங்களை எதிர்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர் பெருமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர் அந்நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு எண் 17ன் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர உறுதியளிக்கும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் நசுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மீண்டும் மக்களாட்சியைக் கட்டியெழுப்புவதற்காக, தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக கண்டி பேராசிரியர் சுமதி சிவமோகன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சி தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளையும் பயன்படுத்துவதாக, கஃபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசுத்தலைவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் நடந்தபோது, அரசுத்தலைவர் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக காலி சிறைச்சாலையில் இருக்கும் 44 கைதிகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக, அவ்வமைப்பின் செயல்திட்ட இயக்குனர் கீர்த்தி தென்னெக்கோன் கூறியுள்ளார்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.