2014-12-16 14:22:39

புனிதரும் மனிதரே - கடவுளின் பணியில் கைம்பெண்


கைம்பெண்கள், இறைவனின் பணியாளர்களாக, அல்லது இறைபணியாளர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றிய பல வாழ்க்கைக் குறிப்புகள், கிறிஸ்தவ வரலாற்றின் பக்கங்களை அணி செய்துள்ளன. அவற்றில் ஒன்று, 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கைம்பெண் ஒலிம்பியாவைப் பற்றியது.
Constantinople நகரில், செல்வம் மிகுந்த ஓர் உயர்குடியில் பிறந்த ஒலிம்பியா அவர்கள், இளவயதிலேயே தன் கணவரான Nebridius என்பவரை இழந்து, கைம்பெண் ஆனார். அவரை மறுமணம் செய்துகொள்ள பல இளவரசர்களும், அரசு அதிகாரிகளும் முன்வந்த போதிலும், ஒலிம்பியா அவர்கள், தன் வாழ்வை இறைவனுக்கும், வறியோருக்கும் அர்ப்பணித்தார்.
தன் செல்வம் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்கு வழங்கினார் ஒலிம்பியா. பேராயர் John Chrysostom அவர்கள், Constantinople நகரில் எழுப்பிவந்த பேராலயத்திற்கு, 10,000 பவுண்டுகள் எடையுள்ள தங்கத்தை நன்கொடையாக அளித்தார். துறவு இல்லம் ஒன்றை அமைத்து, தன் உறவுப் பெண்கள் மூவரோடு தவ வாழ்வை மேற்கொண்டார் ஒலிம்பியா. இந்த நால்வரும், துறவு இல்லத்தின் அருகே ஒரு மருத்துவமனையை எழுப்பி, நோயுற்ற வறியோருக்குப் பணிகள் செய்தனர். தவத்திற்கும், புண்ணிய வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த நான்கு பெண்களையும், பேராயர் John Chrysostom அவர்கள், பெண் தியாக்கோன்களாக அர்ச்சித்தார்.
பேராயர் John Chrysostom அவர்கள், அரசக் குடும்பத்தினரால் துன்புற்றபோதும், அவர் நாடுகடத்தப்பட்டபோதும், ஒலிம்பியாவும், உடன் இருந்த மூன்று துறவிகளும் அவருக்குப் பெரும் உதவியாக இருந்தனர். இதனால், அவர்களும் நாடு கடத்தப்பட்டனர். தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட கைம்பெண் ஒலிம்பியா அவர்கள், 408ம் ஆண்டு, இறைவன் வீட்டில் குடிபுகுந்தார். வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 140 புனிதர்களில், புனித ஒலிம்பியாவின் உருவமும் ஒன்று. அவரது திருநாள், டிசம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.