2014-12-16 15:27:32

பால்டிக் நாடுகளுக்கு எதிராக இரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும்


டிச.16,2014. லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்கு எதிராக இரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளார் அப்பகுதியின் முக்கிய ஆயர் ஒருவர்.
நேட்டோ அமைப்பின் ஆதரவு தங்களுக்கு இருக்கின்றது என்று உணரும் அதேவேளை, இரஷ்யா தனது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லியிருப்பதால், இது குறித்து அனைத்துலக சமூகம் அக்கறை காட்டுமாறு கேட்டுள்ளார் லித்துவேனிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Gintaras Grusas.
உக்ரேய்ன் நாட்டுக்கு எதிரான இரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, பரப்பப்பட்டுவரும் தகவல்களும், போர் குறித்த பிரச்சாரங்களும் மேற்கத்திய நாடுகளில் முழுமையாய் உணரப்படவில்லை என தான் கருதுவதாகக் கூறினார் பேராயர் Grusas.
பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தை அமர்த்தி பயிற்சி கொடுப்பதற்கு மேலும் நூறு கோடி டாலரை அமெரிக்க பிரதிநிதிகள் அவை ஒதுக்கியுள்ளது. இது நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் CNS செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
மூன்று பால்டிக் நாடுகளும், உக்ரேய்னைவிட சிறிய நாடுகள், எனவே இவற்றின் மீது தாக்குதல்களை எளிதாக நடத்த முடியும் என்றும் லித்துவேனிய பேராயர் Gintaras Grusas எச்சரித்தார்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.