2014-12-15 15:03:56

புனிதரும் மனிதரே : தந்தையால் புறக்கணிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி (St Odile of Alsace)


ஏழாம் நூற்றாண்டில் அந்த ப்ரெஞ்ச் அரச குடும்பத்தில் பிறந்த முதல் குழந்தை, பெண்ணாய், அதேநேரம் கண்பார்வையிழந்தும் இருந்தது. இதனால் கோபம் கொண்ட அக்குழந்தையின் தந்தை அக்குழந்தையை வெளியே போட்டுவிட்டார். ஆனால் அக்குழந்தையின் தாய், அக்குழந்தையை பால்மா என்ற ஊருக்குக் கொண்டு போனார். அங்கே விவசாயிகள் அக்குழந்தையை வளர்த்தனர். குழந்தையும் வளர்ந்தது. அக்குழந்தைக்கு பன்னிரண்டு வயது நடந்தபோது அவரை அவ்வூருக்கு அருகிலிருந்த ஓர் அருள்சகோதரிகள் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர் விவசாயிகள். அச்சமயத்தில் ரேகன்ஸ்பெர்க் புனித ஆயர் எர்கார்ட் அவர்களுக்கு இறைவன் காட்சியளித்து, பால்மாவில் வாழும் அச்சிறுமிக்குத் திருமுழுக்கு அளித்து ஒடில் எனப் பெயரிடுமாறு கூறினார். அதோடு ஒரு வானதூதர் அந்த ஆயரை பால்மாவுக்கு அழைத்துச் சென்றதாகப் பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. ஆயரும் அங்குச் சென்று திருமுழுக்கு வழங்கினார். உடனே அச்சிறுமி பார்வை பெற்றார். ஒடில் என்றால் ஒளியின் மகள் என்று அர்த்தம். தனது அக்கா பற்றிக் கேள்விப்பட்ட ஒடிலின் தம்பி Hughes, ஒடிலை அரண்மனைக்கு அழைத்து வந்தார். இதைப் பார்த்த அவர்களின் தந்தை கோபம் அடைந்து மகனை வெட்டிக் கொலைசெய்தார். ஆனால் ஒடில் தனது தம்பி மீண்டும் உயிர்பெறச் செய்தார். பின்னர் அரண்மனையிலிருந்து தப்பிச் சென்ற ஒடில் ஒரு குகையில் ஒளிந்துகொண்டார். அவரது தந்தையான அல்சாஸ் பகுதியின் பிரபு Etichon ஒடிலை விரட்டிச் சென்றபோது மலைப்பாதையில் படுகாயமடைந்தார். இதையறிந்து தனது தந்தைக்கு உதவிசெய்தார் ஒடில். அதன் பின்னரே மனம்மாறினார் அவரது தந்தை. தன்னோடு ஒடிலை வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் ஒடில் துறவு பூண்டார். இவரது தந்தையும் பல துறவு இல்லங்களைக் கட்டிக்கொடுத்தார். பிரான்சின் அல்சாஸிஸ் 662ம் ஆண்டில் பிறந்து 720ம் ஆண்டில் இறந்தார் ஒடில். நல்ல கண்பார்வைக்குப் பாதுகாவலரான புனித ஒடிலின் விழா டிசம்பர் 13. இப்புனிதர், ஒடிலியா, ஒத்திலியா எனவும் அழைக்கப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.