2014-12-15 16:37:05

திருத்தந்தை : வாடிய முகம்கொண்ட, சோகம் நிறைந்த புனிதர் எவருமில்லை


டிச.15,2014. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கிறிஸ்து பிறப்பு விழா, கடவுளின் அருகாமை தரும் மகிழ்வைக் கொணர்ந்து, அந்த மகிழ்வுக்கு நாம் சாட்சிகளாக இருப்பதை நம்மிடம் எதிர்பார்க்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் மகிழ்வும் அமைதியுமான கிறிஸ்து, இவ்வுலகில் மனுவுரு எடுத்தபோது, இறையரசின் விதையைச் சுமந்து, நம் மகிழ்ச்சியாக அவர் வந்தார் என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டிய திருமுழுக்கு யோவானைப் போல, நாமும், நம்மிடையே வாழும் இறைவனை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ள உதவவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மகிழ்வுடன் வாழவே ஒவ்வொருவரும் படைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாடிய முகம்கொண்ட புனிதர் என்றோ, சோகம் நிறைந்த புனிதர் என்றோ எவருமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், குழந்தை இயேசுவின் திரு உருவத்தைச் சுமந்து, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சிறுவர், சிறுமிகளையும், அவர்கள் கொணர்ந்திருந்த திரு உருவங்களையும் ஆசீர்வதித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் வழியே, வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும் கையடக்கமான செபப் புத்தகத்தையும் வழங்கினார்.
ஒவ்வொருவரும் எங்கு சென்றாலும் இச்செபப் புத்தகத்தை தன்னுடன் எடுத்துச் சென்று, செபிக்குமாறு, தன் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.