2014-12-15 16:36:49

திருத்தந்தை : தேவையற்ற சட்டங்களைக் கெட்டியாகப் பிடிப்பது பலவீனத்தின் அடையாளம்


டிச.15,2014. பயன்தராத சட்டங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பது பலவீனமான இதயத்தின் அடையாளம் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்ததைக் குறித்துப் பேசினார்.
பரிசேயர்கள், வெளித்தோற்றத்திற்காக மட்டும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக நடந்தாலும், அவர்களின் உள்ளமோ இறைவனிடமிருந்து தூரமாக இருந்தது, ஏனெனில் எதில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்களோ, அதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.
திருநற்கருணைப் பெறுவதற்கு முன் தயாரிப்பாக நோன்பு இருப்பது குறித்த சில விதிகளை திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் தளர்த்திய வேளையிலும், பலர் புனிதச் சட்டங்களை மீறியதாக உணர்ந்தனர், ஆனால் திருத்தந்தையோ, இயேசுவைப்போல், சட்டங்கள் மக்களுக்காகவே என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவர்களைத் தீர்ப்பிடாமல், இரக்கமுள்ளவர்களாக வாழும் வண்ணம் நமக்கு உள்ளொளியை வழங்கும்படி இறைவனிடம் வேண்டுவோம் என தன் மறையுரையின் இறுதியில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.