2014-12-15 16:37:19

இலத்தீனா நகர் சிறைக் கைதிகள் எழுதியிருந்த கடிதங்களுக்கு திருத்தந்தையின் பதில் கடிதம்


டிச.15,2014. சிறையில் கழிக்கும் காலத்தை, இழந்துபோன காலமாகக் கருதாமல், உண்மையான வளர்ச்சி, அமைதியின் தேடல், மறுபிறப்பிற்குத் தேவையான பலம், நம்பிக்கையை நோக்கித் திரும்புதல் போன்றவற்றிற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக அதனை நோக்குமாறு சிறைக்கைதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டோரை அடைத்து வைத்திருக்கும் இலத்தீனா நகர் சிறையிலிருந்து கைதிகள் தனக்கு எழுதியிருந்த கடிதங்களுக்கு மொத்தமாக ஒரு கடிதம் வழியே பதிலுரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர்கள் தனக்கு அனுப்பியிருந்த கடிதங்களில், நீதியின் பாதையில் இனி நடக்க பலர் வெளியிட்டிருக்கும் விருப்பம் குறித்து தான் பெரிதும் மகிழ்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பதில் மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக் கைதிகளுக்கு மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தினருக்கும் தான் செபிப்பதாக தன் மடலில் உறுதி கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் ஒரு திருப்பலி செபப் புத்தகத்தையும் தன் கிறிஸ்து பிறப்புவிழா பரிசாக அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.