2014-12-13 16:25:29

மத்திய கிழக்கில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு கிறிஸ்தவர் மரணம்


டிச.13,2014. மத்திய கிழக்கில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு கிறிஸ்தவர் வீதம் இறக்கின்றார் என்று நாசரேத்தில் வாழும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபை அருள்பணியாளர் Gabriel Nadaf அவர்கள் கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் நிலைகளை வெளியிடுவதற்காக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர் Gabriel Nadaf அவர்களுக்கு இஸ்ரேல் அரசு 24 மணி நேர உயர்மட்ட பாதுகாப்பை அளித்துள்ளது.
கடும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் அண்மையில் இஸ்பெயினுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது இவ்வாறு தெரிவித்த அருள்பணி Gabriel Nadaf அவர்கள், மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்களின் குரல்களை எங்கும் கேட்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயணத்தை மேற்கொண்டதாக கூறினார்.
மத்திய கிழக்கில் இடம்பெறுவது இனப்படுகொலை என்றும், அது இன்றும் தொடர்கின்றது, ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒரு கிறிஸ்தவர் வீதம் இறக்கின்றார், இதனை முஸ்லிம் தலைவர்கள் அறிந்தே உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நான் பல ஆண்டுகளாக கத்திக்கொண்டிருக்கிறேன், உலகம் மௌனமாக இருக்கின்றது, அண்மை மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கவனத்துக்கும் இது கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் கூறினார் அருள்பணி Gabriel Nadaf.
இஸ்ரேல், அளவில் சிறிய நாடாக இருந்தாலும், அங்கு ஏறக்குறைய 60 இலட்சம் யூதர்களும், 13 இலட்சம் முஸ்லிம்களும், 1,60,000 கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர் என்றும் அருள்பணி Gabriel Nadaf கூறினார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.