2014-12-13 16:23:51

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் கருணைக்குச் சான்று பகரவேண்டியது இன்றைய உலகுக்குத் தேவை


டிச.13,2014. இறைவனின் கருணைக்குச் சான்று பகரவேண்டியது இன்றைய உலகுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வீடற்றோர், பசியாயிருப்போர், வேலையில்லாதவர், அதனால் மாண்பை இழந்தவர் என, சமுதாயத்தில் மிகவும் வறிய மக்களுக்கு உதவி செய்துவரும் பிரான்சின் Foyer Notre Dame des Sansabri, Amis di Gabriel Rosset ஆகிய இரு அமைப்புகளின் 75 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினர் ஆற்றும் பணிகளைப் பாராட்டினார்.
மனிதர்கள் பயனற்றவர் என அடிக்கடி புறக்கணிக்கப்படும் இன்றைய உலகின் செயல்களுக்கு மாறாக, இறைவன் மனிதரை தனது அன்புக் குழந்தையாக நோக்கி மனிதரின் மாண்பை ஏற்கிறார் மற்றும் அவரின் இதயத்தில் அவர்களுக்குச் சிறப்பான இடத்தைக் கொடுக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஏழை மக்களின் துன்பம் அகலவும், அவர்களின் மாண்பை உறுதி செய்து அவர்களுக்குப் புதிய நம்பிக்கையளிக்கவும் Amis di Gabriel Rosset அமைப்பினர் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார் திருத்தந்தை.
நற்செய்தியின் மகிழ்வை உலகுக்கு அறிவிப்பதுபோன்ற மிக அழகான செயல் கிடையாது என்றுரைத்த திருத்தந்தை, வீடற்றோக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இவ்வமைப்பை ஆரம்பித்த நிறுவனரின் குறிக்கோளைத் தொடர்ந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்
பிரான்சில் வீடில்லாதவர்க்கு உதவும் நோக்கத்தில் 1950ம் ஆண்டில் Rosset என்பவரால் இவ்வமைப்புகள் தொடங்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.