2014-12-12 15:40:23

மொசூல் மற்றும் நினிவேப் பகுதிகளை மீட்பதற்கு உலகின் தலைவர்களுக்கு அழைப்பு


டிச.12,2014. கீழை வழிபாட்டுமுறையின் அந்தியோக்கு முதுபெரும் தந்தை மூன்றாம் Ignace Youssif அவர்கள் தலைமையில், கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் தலைவர்கள் உரோமையில் இவ்வாரத்தில் ஆண்டுப் பேரவையை நடத்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் ஜிகாதியர்களிடமிருந்து மொசூல் மற்றும் நினிவேப் பகுதிகளை மீட்பதற்கு, ஈராக்கின் ஆட்சியாளர்களும், உலகில் அதிக அதிகாரம் கொண்ட தலைவர்களும் தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர் தலைவர்கள்.
மொசூல் மற்றும் நினிவேப் பகுதிகள் மீட்கப்படுவதன்மூலம், அங்கிருந்து சென்ற புலம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு வந்து அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழ இயலும் எனவும் அத்தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியின் மக்கள், குறிப்பாக, அப்பகுதியின் கிறிஸ்தவச் சமூகங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்த கவலையையும் தெரிவித்துள்ளனர் அத்தலைவர்கள்.
மேலும், கடந்த வாரத்தில் Azhar சுன்னி இஸ்லாம் பிரிவு பல்கலைக்கழகத்தில் நடந்த பல்சமயத் தலைவர்கள் கூட்டத்தில், பல்வேறு சிறுபான்மை இனத்தவர் மற்றும் மதத்தவர் குறித்து அரசுகள் அக்கறை எடுக்க வேண்டுமென அழைப்புவிடுக்கப்பட்டது பற்றிய திருப்தியையும் இவர்கள் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.