2014-12-12 15:40:15

திருத்தந்தை பிரான்சிஸ் : மனிதாபிமானப் பணிகளில் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள்


டிச.12,2014. மத்திய கிழக்கில் நிலவும் பதட்டநிலைகள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் மனிதாபிமானப் பணிகளில் பிற கிறிஸ்தவத் திருஅவைகளுடன் இணைந்து செயல்படுமாறு கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கீழை வழிபாட்டுமுறையின் அந்தியோக்கு முதுபெரும் தந்தை மூன்றாம் Ignace Youssif Younan அவர்கள் தலைமையிலான 350 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலகெங்கும் வாழ்கின்ற கீழை வழிபாட்டுமுறையின் கத்தோலிக்கச் சமூகங்களுக்கு, குறிப்பாக, சிரியாவிலும் ஈராக்கிலும் கடும் துன்பங்கள் மற்றும் சோதனைகள் மத்தியில் வாழ்கின்ற இத்திருஅவையின் கத்தோலிக்கருக்குத் தனது வாழ்த்துக்களையும், செபத்தையும் தெரிவித்தார் திருத்தந்தை.
மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலைகளால் பல கிறிஸ்தவர்கள் புலம்பெயர்வதையும், அவர்கள் வேறு ஒரு கலாச்சாரச் சூழலில் வாழ நேரிடுவதையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்நிலை, இச்சபையினருக்குப் புதிய மேய்ப்புப்பணி சவால்களை முன்வைக்கின்றது என்றும் கூறினார்.
இறைவனின் தாயான அன்னை மரியா, அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார், புனித எப்ரேம் போன்ற தூயவர்களின் பாதுகாவலில் கீழை வழிபாட்டுமுறையின் கிறிஸ்தவர்களை அர்ப்பணிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் தலைவர்கள் உரோமையில் இப்புதனன்று தங்கலின் ஆண்டுப் பேரவையை நிறைவுசெய்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.