2014-12-12 15:02:49

டிச.13,2014. புனிதரும் மனிதரே : ஆன்மீகமும் அறிவியலும் முரணானவை அல்ல (Blessed Niels Stensen)


17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் புகழ்வாய்ந்த உடல் உறுப்பியல் வல்லுனராக இருந்தவர் நீல்ஸ் ஸ்டென்சன். 1638ம் ஆண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகனில் ஒரு லூத்தரன் கிறிஸ்தவ சபைக் குடும்பத்தில் பிறந்தவர் நீல்ஸ். இவரின் முன்னோர் பலர் லூத்தரன் கிறிஸ்தவ சபை மறைபோதகர்களாகவும், குருக்களாகவும் இருந்துள்ளனர். மருத்துவத்துறையில் ஆர்வம் கொண்டு, அத்துறையில் பட்டமும் பெற்றார் நீல்ஸ். பட்டம் பெற்றபின்னரும் இவரின் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. மனித மூளை பற்றிய இவரின் கண்டுபிடிப்புகள், பின்னர் வந்த ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருந்துள்ளன. பாரிஸ் நகரில் அறிஞர்கள் மத்தியில் இவர் வகுப்புகளை நடத்தியுள்ளார். மருத்துவத்தில் எந்த அளவிற்கு ஆர்வம் இருந்ததோ அந்த அளவிற்கு அவருக்கு ஆன்மீக விவகாரங்களிலும் ஆர்வம் இருந்தது. ஒருமுறை, 1666ம் ஆண்டில், இத்தாலி நாட்டின் லிவொர்னோ நகரில் திருநற்கருணை திருப்பவனியைப் பார்த்தபோது, இவருள் பலத்த சந்தேகம் எழுந்தது. உண்மையிலேயே இந்த சிறு அப்பத்துண்டுக்குள் இறைவன் இருக்கின்றாரா என்ற சந்தேகம் தலைதூக்கியது. ‘இந்த தடுமாற்றம் என்னை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லட்டும்’ என மனதிற்குள் உறுதி பூண்டு, அது குறித்த ஆய்வுகளில் இறங்கினார். விவிலியத்தின் மூலப்பிரதிகளை, அவை கிடைக்கும் இடத்திற்கெல்லாம் சென்று வாசித்தார். பல கால அயரா முயற்சிக்குப்பின், உண்மை ஒளியைக் கண்டார். அதன் விளைவாக, அவர் கத்தோலிக்க மதத்தில் இணைந்தார். கத்தோலிக்க மதத்தில் இணைந்த பின்னரும், அவரின் அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்தன. அதன்பின், தானும் அருள்பணியாளராக வேண்டும் என்ற ஆவல் கொண்டு, பயிற்சி பெற்று, 1675ம் ஆண்டு, தன் 37ம் வயதில், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவரின் முதல் திருப்பலி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகர் மங்களவார்த்தைக் கோவிலில் நிறைவேற்றப்பட்டது. அருள்பணியாளர் நீல்ஸின் அறிவாலும், போதிக்கும் திறனாலும் கவரப்பட்ட திருத்தந்தை 11ம் இன்னொசென்ட் அவர்கள், இவரை வட ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயராக அனுப்பினார். Hanoverலும் Munsterலும் ஆயராகப் பணிபுரிந்த இவர், மிக எளிமையான ஒரு வாழ்வையே மேற்கொண்டார். தேவைக்கு அதிகமாக எதையும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. குடும்பத்திலிருந்து தனக்குக் கிடைத்த சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்கினார். இவர் ஆயராக இருந்தபோது, இவரை சந்தித்த பிரபு ஒருவர், இவரின் பயன்பாட்டிற்கெனெ ஒரு குதிரை வண்டியையும் 6 குதிரைகளையும் பரிசாகத் தர முன்வந்தபோது, ஆயர் நீல்ஸ் அவரை நோக்கி, 'புனித நிக்கொலஸ் போன்று என் பயணத்திற்கு இரண்டு சிறு கழுதைகள் மட்டுமே போதும்' என்றார். பத்து ஆண்டுகள் தீவிர மறைப்பணியாற்றி, பலரை திருஅவைக்குள் கொணர்ந்த ஆயர் நீல்ஸ், 1686ம் ஆண்டு தன் 48ம் வயதில் இறைபதம் சேர்ந்தார். இவரின் உடல் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகருக்குக் கொணரப்பட்டு, புனித இலாரன்ஸ் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1988ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், ஆயர் நீல்ஸ் அவர்களை, முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.