2014-12-12 15:41:23

சுந்தரவனக் காடுகளில் வர்த்தகமுறையான நீர்வழிப் போக்குவரத்தைத் தடை செய்ய ஐ.நா. கோரிக்கை


டிச.12,2014. பங்களாதேஷின் சுந்தரவனக் காடுகளில் பாயும் ஆறுகளின் வழியே நடக்கும் அனைத்து வகை வர்த்தக முறையிலான நீர்வழிப்போக்குவரத்துகளைத் தடை செய்ய ஐ.நா அமைப்பு ஒன்று கோரியிருக்கிறது.
350 டன் எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று இச்செவ்வாயன்று ஆற்றில் உடைந்ததால் பெருமளவு எண்ணெய் கசிந்ததையடுத்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP).
இந்தக் கசிவு, டால்பின்கள் வாழும் ஒரு வனவிலங்குகள் சரணாலயத்திற்கு மிக அருகே உள்ள ஓர் ஆற்றில் நடந்திருப்பதாகவும் இவ்வமைப்பு கூறியுள்ளது.
தனியார் எண்ணெய்க் கப்பல்கள் இந்த உடைந்த கலனை ஆற்றங்கரைக்கு இழுத்து வந்திருக்கின்றன, ஆனால், அப்பகுதியிலிருக்கும் தாவரங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இதனால் மோசமான தாக்கங்கள் ஏற்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக அவ்வமைப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த எண்ணெய்க் கசிவு ஏறக்குறைய 60 கி.மீ. நீளமுள்ள நீர்வழிகளைப் பாதித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவிலும் பங்களாதேஷிலும் 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகள், பிரபலமான ராயல் வங்காளப் புலிகள் சரணாலயமாகும். சுந்தரவனக் காடுகள், யுனெஸ்கோ பாரம்பரிய வனப்பகுதியும் ஆகும்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.