2014-12-12 15:41:02

இந்தியாவில் மத மாற்றத் தடைச் சட்டத்துக்குக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு


டிச.12,2014. இந்தியாவில் மத மாற்றத் தடைச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று, இந்து-ஆதரவு ஆளும் கட்சி கேட்டுக்கொள்ளப்பட்டது குறித்த தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்.
ஆக்ராவில் அண்மையில் 200 முஸ்லிம்கள், இந்துக்களாக மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்ற செய்திகள் வெளியானதையொட்டி, இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கைய்யா நாயுடு அவர்கள், நாட்டில் மத மாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்று, கேட்டுக்கொண்டார்.
இது குறித்து இவ்வெள்ளியன்று கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட ஆணைக்குழுச் செயலர் அருள்பணி தேவ சகாயராஜ் அவர்கள், இந்தியாவில் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது அடக்குமுறையிலிருந்து தப்பிப்பதற்கு தங்களின் மதங்களை விட்டுவெளியேற விரும்புவோரின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாய் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மத உரிமையைவிட, தனிமனித சுதந்திரம் மதிக்கப்பட வேண்டுமென்றும் அருள்பணி தேவ சகாயராஜ் அவர்கள் கூறினார்.
மேலும், தேசிய ஒருங்கிணைப்பு அவையின் உறுப்பினராகிய ஜான் தயாள் அவர்களும், இந்தியாவுக்கு மத மாற்றத் தடைச் சட்டம் தேவையில்லை என்றே கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், முஸ்லீம்க்கு ஐந்து இலட்சம் ரூபாயும் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ’தரம் ஜக்ரன் சமிதி’என்ற இந்து அமைப்பு அறிவித்துள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் செயல்படும் இந்த அமைப்பின் சார்பில் இந்த அறிவிப்புக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்துக்களாக இருந்து பிற மதத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்வாறு ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.