2014-12-11 16:12:51

பெத்லகேம் 'அமைதி ஒளி', மத்ரித் Almudena பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது


டிச.11,2014. புனித பூமியில் உள்ள பெத்லகேம் பசிலிக்காவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 'அமைதி ஒளி', டிசம்பர் 14, இஞ்ஞாயிறன்று ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகர் Almudena பேராலயத்தைச் சென்றடைகிறது.
பெத்லகேமில் அமைந்துள்ள கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில், ஆண்டு முழுவதும் தொடர்ந்து எரிந்துவரும் தீபம் ஒன்று, பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் பராமரிப்பில் உள்ளது.
1986ம் ஆண்டு, ஆஸ்திரிய நாட்டின் முயற்சியால், இந்த விளக்கிலிருந்து ஏற்றப்பட்ட ஒரு தீபம், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆஸ்திரிய நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அந்த ஆண்டு முதல், சாரணர் குழுவைச் சேர்ந்தவர்கள், பெத்லகேம் அமைதி ஒளியை வெவ்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பழக்கத்தை உருவாக்கினர்.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு, பெத்லகேம் அமைதி ஒளி, இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
"ஒளியேற்ற அழைப்பு" என்ற மையக்கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, டிசம்பர் 13, சனிக்கிழமையன்று பெத்லகேம் பசிலிக்காவில் துவங்கி, ஆஸ்திரியாவின் வியன்னா நகர் வழியே, இஞ்ஞாயிறன்று மத்ரித் நகர் பேராலயத்தை அடைகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.