2014-12-10 15:26:37

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


கடந்த வாரங்களில் திருஅவைக் குறித்த ஒரு தொடரை தன் புதன் மறையுரைகளில் வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, குடும்பம் குறித்த ஒரு புதிய தொடரைத் துவக்கிவைத்து உரையாற்றினார்.
அன்புள்ளங்களே! இன்று நாம் குடும்பம் குறித்த ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்குவோம். இது குடும்பத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கும். 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெறவிருக்கும் குடும்பம் குறித்த மாநாட்டிற்குத் தயாரிப்பாக, அண்மையில் குடும்பங்கள் எதிர்நோக்கும் மேய்ப்புப்பணி சவால்கள் குறித்து உரோமையில் கூடிய ஆயர் மாமன்றம் விவாதித்ததை நாம் அறிவோம். குடும்பங்கள் எதிர்நோக்கும் தீவிர சவால்கள் குறித்த திறந்த மனப்பான்மையுடன்கூடிய கலந்துரையாடல்களுடன் இந்த ஆயர்கள் மாமன்றக் கூட்டம் துவங்கியது. திருமணம் எனும் அருளடையாளம் குறித்த அடிப்படை உண்மைகளின் ஒளியில், அதன் கூறுபடா தன்மை, ஒன்றிப்பு, பற்றுமாறா உறுதிப்பாடு மற்றும் வாழ்வுக்கு தன்னைத் திறந்த நிலை குறித்து விவாதித்தது. இந்த மாமன்றத்தின் கலந்துரையாடல் மற்றும் கருத்துக்கோவை இடம்பெற்ற காலத்தின் கனிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் சிறு சிறு குழுக்களாக விவாதிக்கப்பட்டன. இக்குழுக்களின் பரிந்துரைகளும், பகுப்பாய்வுகளும் இறுதி ஏட்டில் இணைக்கப்பட்டு, அதுவே மாமன்றத் தந்தையர்களின் இறுதி அறிக்கைக்கு அடிப்படையானது. இந்த இறுதி அறிக்கை உலகின் ஆயர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளின் முடிவு, அடுத்த அக்டோபர் கூட்டத்திற்கு கொணரப்படும். இந்த மாமன்ற முயற்சிகள், குடும்பத்திற்கும், திருஅவைக்கும் சமூகத்திற்கும் உண்மையிலேயே பயனுள்ள தீர்மானங்களைக் கொணர வேண்டுமென அன்னைமரியின் பரிந்துரைகளை மன்றாடுமாறு நான் உங்கள் அனைவரையும் விண்ணப்பிக்கிறேன்.
இவ்வாறு, தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.