2014-12-10 16:04:55

சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, பெரும் மனித உரிமை மீறல் - இந்திய ஆயர் பேரவை


டிச.10,2014. சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, இந்தியாவில் மிக அதிகமாக, ஆழமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் மனித உரிமை என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.
டிசம்பர் 10, இப்புதனன்று உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றம் பணிக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மை மதத்தவர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுக்கள், மாநில அரசுகளையும் எதிர்த்துச் செயல்படும் துணிவை பெற்று வருகின்றன என்று, இப்பணிக்குழுவின் செயலர், அருள்பணி Charles Irudayam அவர்கள் கூறியுள்ளார்.
அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் இந்தியச் சட்டங்களுக்குச் சற்றும் மதிப்பு அளிக்காத இந்த வன்முறை குழுக்கள், மனித உரிமைகள் என்ற எண்ணத்தையே எள்ளி நகையாடுகின்றன என்று இவ்வறிக்கை தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினரும், தலித்துக்களும் ஒவ்வொரு நாளும் வன்முறைகளுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்கின்றன என்று எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, வலுவற்ற சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உளது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

ஆதாரம் : CBCI (OJPD) / Fides








All the contents on this site are copyrighted ©.