2014-12-10 16:04:24

"இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" - நீதி, அமைதி திருப்பீட அவையின் முயற்சி


டிச.10,2014. குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடாமல் இருப்பதால், குழந்தைகள், இணையதளத்தையும், ஏனைய தொடர்புகளையும் தேடிச் செல்லும் ஆபத்து கூடியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" என்ற கருத்து விளம்பரத்தின் நுணுக்கங்களை, இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு விளக்கிய நீதி, அமைதி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
டிசம்பர் 10, இப்புதனன்று கடைபிடிக்கப்படும் மனித உரிமைகள் உலக நாளையும், குழந்தைகள் உரிமை சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட 25ம் ஆண்டையும் ஒட்டி, "இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" என்ற கருத்து விளம்பர முயற்சியை, நீதி, அமைதி திருப்பீட அவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையத்தளத்தினால் ஆபத்துக்களுக்கு உள்ளான ஒரு சிலரும் இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்கள் வாழ்வில் அடைந்த துன்பங்களை விளக்கிக் கூறினர்.
குழந்தைகளின் நலனிலும், குடும்பங்களின் நலனிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட திருப்பீடம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளும் முயற்சிகளை, கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.