2014-12-10 16:09:37

அடுத்துவரும் பத்தாண்டுகள், ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் - ஐ.நா. அறிவிப்பு


டிச.10,2014. டிசம்பர் 10, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளுக்கு ஒரு தயாரிப்பாக, இச்செவ்வாய், நியூயார்க் நகரின் Harlem பகுதியில், ஐ.நா. அவையின் துணைத் தலைவர், Jan Eliasson அவர்கள், மனித உரிமைகள் அகில உலக அறிக்கையை வாசித்தார்.
அடுத்துவரும் பத்தாண்டுகள் ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள வேளையில், கறுப்பின மக்களுக்கு மிகவும் பொருளுள்ள வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள Harlem என்ற இடத்தில் இந்த அறிக்கையை வாசித்தது, பொருள்தரும் செயல் என்று Eliasson அவர்கள் கூறினார்.
Harlem பகுதியில் 1905ம் ஆண்டு, Schomburg மையம் என்ற ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, ஆப்ரிக்க இனத்தவர் குறித்த பல அரிய தரவுகள் அங்கு சேகரிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. அவையின் துணைத் தலைவர் குறிப்பிட்டுப் பேசினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மட்டுமல்ல, உலகெங்கும் கறுப்பின மக்களின் விடுதலையைக் கொண்டாடவும், தொடந்து, அவர்களின் முழு விடுதலைக்கு உழைக்கவும், ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் வழிவகுக்கும் என்றும், Eliasson அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.