2014-12-09 14:27:32

விவிலியத்
தேடல் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை பகுதி - 4


RealAudioMP3 மன்னிக்க மறுத்த பணியாள் உவமையின் முதல் பகுதியில் அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழ்ந்தவற்றை இயேசு இவ்விதம் விவரிக்கிறார்:
மத்தேயு 18: 23-25
ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

அரசர் விடுத்த ஆணை, நம்மை இன்றைய உலகின் அவலங்களுக்கு அழைத்து வருகிறது. கடன் தொகையைச் செலுத்த வழியில்லாத பணியாளர், ஒரு வர்த்தகப் பொருளாக மாற்றப்படுகிறார். அவர் மட்டுமல்ல, அவரது மனைவி, மக்கள், அனைவருமே வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு, அவரது உடைமைகளுடன் சேர்த்து விற்கப்பட வேண்டும் என்று அரசர் ஆணையிடுகிறார்.
நாம் வாழும் காலத்தில், ஒரு வீட்டுத் தலைவர் பட்டக் கடனை அடைக்கமுடியாத நிலையில், குடும்பம் முழுவதும் விற்கப்பட்டு, கொத்தடிமைகளாக வாழ வேண்டிய துயரங்கள், நம் நினைவை நெருடுகின்றன. பணியாளர் பட்ட, 'பத்தாயிரம் தாலந்து' கடனை, ஒருநாள் கூலி என்ற அளவுகோல் கொண்டு கணக்கிட்டால், அது 60,000,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித் தொகையாக மாறுகிறது. அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த, கடன்பட்ட பணியாளர் மட்டுமல்ல, அவரது மனைவி, மக்கள் மட்டுமல்ல, அவருடைய பல தலைமுறையினர் அந்த அரசரிடம் கூலி எதுவும் பெறாமல் உழைக்கவேண்டும். வேதனைதரும் இந்தக் கணக்கு, தலைமுறைத் தலைமுறையாகக் கொத்தடிமைகளாகச் சிறைப்பட்டுள்ள ஆயிரமாயிரம் குடும்பங்களை நினைவுக்குக் கொணர்கிறது. இத்தகைய அடிமை நிலை, அன்று மட்டுமல்ல, நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது உண்மைதானே!

கடன் தொல்லையால் வர்த்தகப் பொருளாக மாறி, சீரழிவது, தனி மனிதர்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமல்ல. நாடுகளும் கடன் தொல்லையில் சிக்கித் திணறுவதைக் காணலாம். 'மூன்றாம் உலகம்' என்ற முத்திரை குத்தப்பட்ட நாடுகள், தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய, வளர்ச்சியடைந்த, செல்வம் மிகுந்த நாடுகளிடமிருந்து கடன் பெறுகின்றன. இவ்வாறு, கடன் கேட்டுக் கையேந்தும் நாடுகள், பெரும்பாலும், ஐரோப்பியக் காலனிய ஆதிக்கத்தில் சிக்கித்தவித்த ஆசிய, ஆப்ரிக்க நாடுகளே! காலனிய ஆதிக்கத்தில் இந்நாடுகள் தவித்த வேளையில், இந்நாடுகளின் செல்வங்களை, 'ஏற்றுமதி' என்ற பெயரில், ஐரோப்பியர்கள், தங்கள் நாடுகளுக்குத் திருடிச் சென்றதும் வரலாற்று உண்மை.
மிகப் பழமை வாய்ந்த கிரேக்க, எகிப்து, சிந்து சமவெளி, உரோமையக் கலாச்சாரச் சின்னங்கள் பல, இன்று ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் விலைமதிப்பற்றப் பொருள்களாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட நாடுகளின் அனுமதியின்றி, இந்தக் கருவூலங்களை, தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர் ஐரோப்பியர்கள். மிகவும் வறுமைப்பட்ட நாடான எத்தியோப்பியாவிலிருந்து, 1700 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியர்கள் எடுத்துச்சென்ற ஒரு கல்தூண், (Obelisk of Axum) 70 ஆண்டுகளுக்கு முன்னர், மீண்டும் அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், கடத்திச் செல்லப்பட்ட பல அரிய கருவூலங்கள் இன்னும் ஐரோப்பிய நாடுகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ‘கோஹினூர் வைரம்’ இன்று பிரித்தானிய அரச மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ளது என்பது உலகறிந்த வரலாறு.

இத்தகையச் 'சுரண்டல்களால்' வறுமைப்பட்டுப் போன 'மூன்றாம் உலக' நாடுகள், தங்கள் வளர்ச்சிக்கென செல்வம் மிகுந்த நாடுகளிடம் கடன் பெற்றுள்ளன. நாட்டின் அடிப்படைத் தேவைகளுக்கும், வளர்ச்சிக்கும் பயன்படுவதற்கென வாங்கப்பட்ட இக்கடன் தொகையில் பெரும்பாலான பகுதி, தற்காப்பு என்ற பெயரில், இராணுவத் தளவாடங்களை வாங்கிக் குவிப்பதிலும், அரசியல்வாதிகளின் ஊழல்களிலும் மறைந்து போயின.
உலக நிதி உதவி (IMF - International Monetary Fund), உலக வங்கி (WB - World Bank) ஆகிய சக்திவாய்ந்த நிறுவனங்கள், நாடுகளுக்குக் கடன் வழங்கியபோது, அவை விதித்த நிபந்தனைகள், கடன் பெற்ற நாடுகளின் கழுத்தை நெறித்தன. வளர்ச்சியடையப் போராடிவந்த நாடுகள், தாங்கள் பெற்ற கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே தங்கள் நாட்டு வருமானத்தைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
'Annual Debt Service', அதாவது, 'ஆண்டுக் கடன் சேவை' என்று மரியாதையாக ஒலிக்கும் பெயருடன், வட்டித்தொகை வசூல் செய்யப்பட்டது. எடுத்துக்காட்டாக, இலங்கை நாடு, 800 கோடி டாலர்கள், அதாவது, இலங்கை ரூபாயில் 100,000 கோடி கடன் பட்டிருந்தது. இந்தக் கடன் தொகைக்கு, ஆண்டொன்றுக்கு 493 மில்லியன் டாலர்கள், அதாவது, 5,916 கோடி இலங்கை ரூபாயை, 'கடன் சேவை'யாக, வட்டியாகக் கட்டி வந்தது. ஒரு சில வறுமைப்பட்ட ஆப்ரிக்க நாடுகள், வட்டிக்கு வட்டி கட்டிவந்த அவலமும் உண்டு. IMF, WB ஆகிய நிறுவனங்கள், எண்ணெய் வளமிக்க (OPEC - Organization of the Petroleum Exporting Countries) நாடுகள், செல்வம் மிகுந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை விதித்த நிபந்தனைகளால், 'மூன்றாம் உலக' நாடுகள், கடன் வெள்ளத்தில் மூழ்கி, ஏறத்தாழ கொத்தடிமைகளாக மாறியுள்ளன என்பது வேதனைதரும் உண்மை.

உலகச் சமுதாயம், இரண்டாவது மில்லென்னியத்தை (2000) முடித்து, மூன்றாவது மில்லென்னியத்தில் (2001ம் ஆண்டில்) அடியெடுத்து வைத்தபோது, வறுமை நாடுகளின் கடன் தொகையை செல்வம் மிகுந்த நாடுகள் இரத்து செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் உலகெங்கும் எழுந்தது. விவிலியத்தில் கூறப்பட்ட யூபிலி ஆண்டு என்ற கருத்தின் அடிப்படையில் இந்த வேண்டுகோள் எழுந்ததென்று சொல்லப்பட்டது.
ஆறு ஆண்டுகள் உழைக்கும் இஸ்ரயேல் மக்கள், ஏழாம் ஆண்டு ஓய்வெடுக்கவேண்டும் என்றும், ஏழு முறை ஏழு ஆண்டுகள், அதாவது, 49 ஆண்டுகள் முடிந்து ஐம்பதாம் ஆண்டு துவங்கும்போது, அது புனிதமான யூபிலி ஆண்டாகக் கடைபிடிக்கப்படவேண்டும் என்றும் விவிலியம் கூறுகிறது.
லேவியர் நூல் 25: 3-12
ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய். ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அன்னியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும்.
தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு. அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

ஏழாம் ஆண்டிலும், யூபிலி ஆண்டிலும் இஸ்ரயேல் மக்களுக்கென வகுக்கப்பட்ட விதிகள், மனதுக்கு இதம் தரும் சொற்களாக உள்ளன. உழைக்கும் மனிதருக்கும், நிலத்திற்கும் ஒய்வு வேண்டும், அடிமைகளாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், கடன்பட்டோரின் கடன் இரத்து செய்யப்படவேண்டும் என்று கூறப்படும் விதி முறைகள் மனதிற்கு நிறைவு தரும் எண்ணங்கள்.

மூன்றாவது மில்லென்னியம் துவங்கிய வேளையில், யூபிலி ஆண்டின் விதிகளாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள எண்ணங்களைப் பின்பற்றி, வறுமைப்பட்ட நாடுகளின் கடன்கள் ஓரளவு இரத்து செய்யப்பட்டன. 1999ம் ஆண்டிலிருந்து, 2004ம் ஆண்டு முடிய கடன் தொகை இரத்து செய்யப்பட்டதால், அத்தொகையைக் கொண்டு வறுமைப்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்ந்த ஒரு சில வளர்ச்சிகளைப் பற்றிய பின்வரும் விவரங்கள் தெரிய வந்தன:


2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிய நாடுகள் பலவற்றின் கடற்கரைப் பகுதிகளை விழுங்கிய 'சுனாமி'யைத் தொடர்ந்து, 15 ஆசிய நாடுகளின் கடன்தொகைகள் இரத்து செய்யப்பட்டன. 'வறுமையை வரலாறாக்குக' (Make Poverty History) என்று உலகின் பல நாடுகளில் 2005ம் ஆண்டு துவங்கிய கொள்கைப் பரப்பு முயற்சியால், இன்னும் பல நாடுகளின் கடன் இரத்து செய்யப்பட்டது.
வறுமைபட்ட நாடுகளின் கடனை இரத்துசெய்யும் பல்வேறு முயற்சிகள் 1999ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், உலகின் கடன்பட்ட நாடுகளின் வளர்ச்சி இன்னும் நிறைவடையவில்லை என்பது உண்மை. இதன் காரணத்தை ஆழமாகச் சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. செல்வந்தர்களும், செல்வம் மிகுந்த நிறுவனங்களும், நாடுகளும் அளவுகடந்த சுயநலமும், பேராசையும் கொண்டு வாழ்வதால், மனிதர்கள் வர்த்தகப் பொருளாக மாறுவதும், கொத்தடிமைத் தொழில் பல வடிவங்களில் பெருகுவதும் தொடர்கதையாக மாறியுள்ளன. இந்தப் 'புதுயுக அடிமைத்தனத்தை' எதிர்த்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி குரல் எழுப்பி வந்துள்ளார்.

2015ம் ஆண்டு, சனவரி முதல் தேதி, கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்படும் உலக அமைதி நாளின் மையக்கருத்தாக, "ஒருபோதும் அடிமைகள் இல்லை; ஆனால், உடன்பிறப்புக்கள்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார். இந்நாளுக்கென அவர் விடுத்துள்ள செய்தியில், "மனித வர்த்தகம், மனுக்குலத்திற்கெதிரான குற்றம்; சமுதாயத்தில் காணப்படும் திறந்ததொரு காயம்; கிறிஸ்துவின் உடலில் விழும் சாட்டையடி" என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
அரசரிடம் பட்டக் கடனைத் திருப்பித் தரமுடியாத பணியாளர், இன்றைய உலகில் நிலவும் மனித வர்த்தகம், மூன்றாம் உலக நாடுகளின் தீராதக் கடன் ஆகிய அவலங்களை நமக்கு நினைவுறுத்துகிறார். புலரும் புத்தாண்டில் இந்த அவலங்கள் ஒழியவேண்டுமென்று இறைவனை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.