2014-12-09 15:49:43

மலேரியா இறப்புக்களைக் குறைத்திருப்பது மிகப்பெரிய சாதனை, WHO


டிச.09,2014. மலேரியாவால் இடம்பெறும் இறப்புக்கள் பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பது, நாடுகளின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.
2001க்கும், 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலக அளவில் மலேரியாவால் தாக்கப்பட்டவர்களில், 43 இலட்சம் பேரின் வாழ்வு பாதுகாக்கப்பட்டுள்ளது, இவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 39 இலட்சம் குழந்தைகள் ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் என்று WHO நிறுவனம் கூறியது.
2013ம் ஆண்டில், அஜர்பைஜான், இலங்கை ஆகிய இரு நாடுகளில் முதன்முறையாக மலேரியாவால் தாக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட இல்லை என்று கூறும் WHO நிறுவனம், இந்நோயை ஒழிப்பதற்கு மேலும் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன என்றும் கூறியது.
உலகில் 2000மாம் ஆண்டில் 17 கோடியே 30 இலட்சமாக இருந்த மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 12 கோடியே 80 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, மலேரியா நோயை, இரண்டு நாட்களில் குணப்படுத்தும் எஸ்.ஜே., 733 என்ற மருந்து கலவையை, அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.