2014-12-09 15:48:17

திருத்தந்தை : ஒரு தாயாக இருப்பது திருஅவையின் மகிழ்வு


டிச.09,2014. ஒரு தாயாக இருந்து, இழந்துபோன ஆட்டைத் தேடிக் காண்பதுவே திருஅவையின் மகிழ்வு என்று, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
திருஅவை, ஒரு நிறுவனத்தின் அமைப்பைக் காட்டுவதாக இருக்கத் தேவையில்லை என்று திருப்பலி மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய அவர்கள், அந்த அமைப்புமுறை திருஅவையை வேதனைப்படுத்தி அதனை தனக்குள்ளே முடக்கிவைத்தால், அது திருஅவையை ஓர் அன்னையாக ஆக்காமல் இருந்தால் இத்தகைய அமைப்புமுறை அதற்கு அவசியமில்லை என்று கூறினார்.
இயேசுவின் கனிமொழியிலும், கருணையிலும் ஆறுதலடைந்து மகிழ்ச்சியான கிறிஸ்தவர்களாக வாழுமாறும், ஆண்டவரின் ஆறுதலுக்குக் கதவைத் திறந்துவிடுமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பபிலோனியாவில் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் துன்பங்கள் முடிந்தது பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் பகுதியிலுள்ள, “ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்ற இந்நாளைய முதல் வாசகத்தின் முதல் வரியைச் சொல்லி மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, காணாமற்போன ஆடு பற்றிய உவமை குறித்த சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
திருஅவையின் ஆறுதல் என்னவென்ற கேள்வியைத் தான் கேட்பதாகவும், ஆண்டவரின் கருணையையும் மன்னிப்பையும் உணரும்போது தனிமனிதர் ஆறுதல் அடைவது போன்று, திருஅவையும் காணாமற்போனதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அகமகிழ்வடைகின்றது என்று தான் கருதுவதாகவும் கூறினார் திருத்தந்தை.
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுகின்றது, ஆண்டவரின் பிரசன்னமே அவர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று கூறிய திருத்தந்தை, மிகப்பெரிய ஆறுதல், கருணையும் மன்னிப்புமே என்றுரைத்தார்.
தன்னைவிட்டு வெகுதொலைவில் இருக்கும் சகோதர சகோதரிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் திருஅவையின் மகிழ்வு இருக்கின்றது, இப்பண்பிலே திருஅவை ஓர் அன்னையாக உள்ளது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.