2014-12-09 15:49:24

அணுஆயுதங்கள் அற்ற ஓர் உலகை உருவாக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


டிச.09,2014. அணுஆயுதங்கள் அச்சுறுத்தல் இல்லாத ஓர் உலகை அமைக்குமாறு, உலகத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து மத நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“அணுஆயுதங்கள் மனிதாபிமானத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இத்திங்களன்று தொடங்கிய கருத்தரங்குக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
150 நாடுகளுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், திருத்தந்தையின் இச்செய்தியை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் வாசித்தார்.
அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தேவையற்ற துன்பங்கள் குறித்து சிறப்புக் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அணுஆயுதங்களற்ற மற்றும் அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே மனம் திறந்த உரையாடல் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி என்பது, நாடுகள் சமமான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் சூழல் இல்லை, மாறாக, அமைதி, உண்மையான நீதியினால் கிடைப்பது ஆகும் என்று தனது செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கு நீண்ட காலமாகத் திருப்பீடம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.