2014-12-09 15:49:36

2014ம் ஆண்டு, இலட்சக்கணக்கான சிறாருக்கு கொடூரமான ஆண்டு, யூனிசெப்


டிச.09,2014. உலகில் சண்டைகள் இடம்பெறும் இடங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான சிறாருக்கு 2014ம் ஆண்டு கொடூரமான ஆண்டாக உள்ளது என, ஐ.நா. குழந்தைகள் நல நிதியமான யூனிசெப் அறிவித்தது.
இவ்வளவு எண்ணிக்கையுள்ள சிறார், இம்மாதிரியான கொடுமைகளால் அண்மைக் காலங்களில் துன்புறுவது போன்று வேறு எக்காலத்திலும் துன்புறவில்லை என்று, யூனிசெப் நிறுவன இயக்குனர் அந்தோணி லேக் அவர்கள் கூறினார்.
பத்திரிகையாளர் கூட்டத்தில் சிறார் குறித்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய லேக் அவர்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன் மற்றும் ஆக்ரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சண்டைகளில் ஏறக்குறைய ஒரு கோடியே ஐம்பது இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார்.
ஆயுதம் தாங்கிய சண்டைகள் இடம்பெறும் நாடுகள் மற்றும் பகுதிகளில் 23 கோடிச் சிறார் வாழ்கின்றனர் என்றும், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இலட்சக்கணக்கான சிறார், வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் லேக்.
வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோதும், தங்கள் படுக்கைகளில் தூங்கிக்கொண்டிருந்தபோதும் சிறார் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் பெற்றோரின்றி கைவிடப்பட்டனர், அவர்கள் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகினர், போர்முனைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கும் உள்ளாகினர், ஏன், அடிமைகளாகவும் விற்கப்பட்டனர் என்று யூனிசெப் நிறுவன இயக்குனர் அந்தோணி லேக் அவர்கள் கூறினார்.
ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏறக்குறைய 6 கோடியே 80 இலட்சம் சிறார் போலியா நோயால் தாக்கப்பட்டனர். மேலும், தெற்கு சூடானில் 70 ஆயிரம் சிறார் ஊட்டச்சத்துக்குறைவால் சிகிச்சை பெற்றனர் என்றும் யூனிசெப் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.