2014-12-08 13:01:42

வாரம் ஓர் அலசல் – மாற்றம் என்பது சாத்தியமே


டிச.08,2014 RealAudioMP3 . Hagupit கடும் புயல் காற்று தாக்கவிருக்கிறது, பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயருங்கள் என்ற முன்னெச்சரிக்கையை, கடந்த வாரத்தில் பிலிப்பைன்ஸ் நாடு தனது குடிமக்களுக்கு விடுத்தது. இதனால் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். 2013ம் ஆண்டு நவம்பரில் வீசிய ஹையான் கடும் புயலால் ஏழாயிரத்துக்கும் அதிகமானோரைப் பலிகொடுத்து, நாற்பது இலட்சம் வீடுகளையும், பெருமளவாகப் பொருள் சேதங்களையும் இழந்த பிலிப்பைன்ஸ் மக்கள் தற்போது விழித்துக்கொண்டு செயல்பட்டதால் Hagupit புயலின் பாதிப்பால் பெரும் அழிவுகளைத் தவிர்த்துள்ளனர். Hagupit புயல் இத்திங்களன்று தலைநகர் மனிலா நோக்கித் திரும்பியுள்ளது. மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய ஹகுபித் புயலால் அந்நாட்டினர் அஞ்சிய அளவுக்கு, கடல் நீர் ஊருக்குள் புகவில்லை. வருகிற வியாழன் காலையில் இப்புயல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியைக் கடக்கும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றது. அதேநேரம், இப்புயல் கரையைத் தொட்ட முதல் இடமான நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்திருந்த மக்கள் தற்போது சொந்த இடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
தாழ்வான காற்றழுத்தம், எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம், ஆற்றில் வெள்ளம்.. எச்சரிக்கை... திருடர்கள் பயம், பக்தர்கள் ஜாக்கிரதை, நோய்க்கிருமிப் பரவல், எச்சரிக்கை... அன்பு நேயர்களே, இப்படி பல நேரங்களில் பலவிதமான எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. வரவிருக்கும் ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பவர்கள் அழிவுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு எச்சரிக்கைகள் விடப்பட்டாலும் அறிவற்றவர்களாக நடந்து கொள்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், தாங்கள் வாழுகின்ற சமுதாயத்துக்கும் அழிவை விதைக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சிறுமி தனது அப்பாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தைக் கேட்போம்.
அன்புள்ள அப்பாவுக்கு, உங்கள் மகள் ஜே.பவித்ரா எழுதும் அன்புக் கடிதம். மாற்றம் என்பது சாத்தியமே. நீங்கள் தினமும் குடிச்சிட்டு அம்மாக்கிட்ட சண்டை போடுவீங்கணுதான் நான் நேரத்துல தூங்கப்போய்டுவேன். என்னால ஒழுங்காப் படிக்கவும் எழுதவும் முடியல. அப்பா, நீங்க ரொம்பக் குடிக்கிறதால எனக்குப் பயமா இருக்கு. ஏன்னா.. குடிச்சா புற்றுநோய் வரும். அப்பா நீங்க மனிதனா மாற எங்க பள்ளிக்கூடத்துல நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துல கலந்துகொள்ளுமாறு எங்கள் பள்ளியின் சார்பாக அன்புடன் அழைக்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்பு மகள் ஜே.பவித்ரா.
இப்படி எத்தனை குழந்தைகள் தங்களின் குடிகார அப்பாக்களை நினைத்து தினம் தினம் கண்ணீர் வடித்து, பசித்த வயிறோடு படுக்கைக்குச் செல்கின்றனர்! கடந்த வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள ஒரு கேள்வி இன்றைய நிகழ்ச்சியில் குடிகார அப்பாக்களை நினைக்க வைத்துள்ளது. மதுபானங்களுக்குப் பெயர்போன கேரள மாநிலத்தில்கூட மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் அதிக அளவில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 6,825 டாஸ்மாக் கடைகளும், 4,435 மதுபானக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 1,748 டாஸ்மாக் கடைகளும், 1,384 மதுபானக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இன்று தமிழகத்தில் நடக்கும், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து சமூகப் பிரச்சனைகளுக்கும் மதுக்கடைகள்தான் முக்கிய காரணம். மது, ஒரு தனிப்பட்ட மனிதரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமூகத்தையுமே அழிக்கும் சக்திவாய்ந்தது என்று சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். குடிப்பழக்கத்தால் தமிழகம் பொருளாதாரத்தில் கடைசி இடத்தில் உள்ளது, தொழில்வளர்ச்சியும் மந்த நிலையில் உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் அமைப்பு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென வழிகாட்டும்போது, மாநில அரசே மதுபான விற்பனையில் ஈடுபடுவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. சாலை விபத்தில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி அவர்களது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்தபோது, பலியானவர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டினார்கள் என அரசு தரப்பில் ஒருவாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி மது விற்பனை குறித்தும், மதுவிலக்குக் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி டிசம்பர் 11ம் தேதிக்குள் அவற்றுக்குப் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், அரசியல் அமைப்பின் 47வது பிரிவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயல வேண்டுமென கூறியிருக்கும் நிலையில், மதுவைத் தடுக்கவேண்டிய மாநில அரசே வருமானத்திற்காக மதுபானக் கடைகளை நடத்துவது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்திவிட்டு, இதுவரை மது விற்பனை மூலம் கிடைத்த வருவாயை வேறு வழிகளில் உருவாக்க அரசு ஏன் முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது. தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் மது விற்பனையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2003ம் ஆண்டிலிருந்து மதுபானத்தை டாஸ்மாக் மூலம் அரசு விற்பனை செய்துவருகிறது.
மதுபானக் கடைகளை மூடுவதன்மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிக்கட்டலாம் என்றே பலரும் கூறுகின்றனர். முதலில், அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; அடுத்ததாக, விற்பனை வரியிலும் பத்திரப்பதிவிலும் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் சொல்லியுள்ளார். மதுவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்கையை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாயை செலவு செய்கிறது. சிகிச்சைக்கு மட்டும் செலவு செய்தால் போதாது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்று சமூகவியலாளர்கள் சொல்கின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி, மாநிலத்தின் ஏதாவது ஒரு மூலையில் பெண்களின் போராட்டம் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
மதுவின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு தீர்வே இல்லையா? ஏன் இல்லை, இருக்கின்றது. தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே கிடையாது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட குடிநோயாளியும் மதுவிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை ஆல்கஹாலிக் அனானிமஸ் போன்ற அமைப்புகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்து வருகின்றன. அதேசமயம், பள்ளிச் சிறாரால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பள்ளிச் சிறார் நிரூபித்துள்ளனர் என்பதை தி இந்து நாளிதழில் வாசித்தோம். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேபினமருதஅள்ளி கிராமம் என்றால், சாராயம் என்று அர்த்தம். சாராயம் காய்ச்சுவது, விற்பது, குடிப்பது மட்டுமே அக்கிராம மக்களுக்குத் தெரியும். பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து சாராயம் வாங்கிப்போவார்கள். ஒரு கட்டத்தில் சாராயம் ஒழிக்கப்பட்டது. மக்கள் விவசாயத்துக்கு மாறினார்கள். அப்போது வணிகமயமான மது இவர்களை ஆட்கொண்டது. மது ஒருபக்கம் மக்களை ஆக்கிரமித்தது என்றால், இன்னொரு பக்கம் அணைக்காக வளமான ஊரையும் இழந்தார்கள். இப்படியாக மது ஒரு கிராமத்தையே, ஒரு தலைமுறையையே அழித்துவிட்டது. இப்போது ஊருக்குள் 45 வயதைத் தாண்டிய ஆண்கள் நான்கு பேர்கூட இல்லை. ஒரு தலைமுறை அழிந்த பிறகே, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதிய விடியல் பிறந்திருக்கிறது - குழந்தைகளின் வடிவில்!
அங்கு ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வந்த குழந்தைகள் மதுவின் தீமைகளைத் தாங்கள் கற்றதுடன், தங்கள் பெற்றோருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். அதோடு, ஒரு தலைமுறை அழிந்த சோகத்தையும், அழிவுக்கான அரக்கன் எது என்பதையும் தங்கள் தந்தையருக்கு உணர்த்தினார்கள். “இன்றைக்கு நீங்கள் மது அருந்தினால் வீட்டுக்கு வர மாட்டோம்”என்று பள்ளியின் வாசலில் இரவுகளைக் கழித்தார்கள். பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் அக்குழந்தைகள். தினமும் சிலேட்டில், துண்டுச் சீட்டில், வீட்டுப்பாட நோட்டில் அப்பாக்களுக்கு வகுப்பெடுத்தார்கள். பல சமயங்கள் குடிநோயாளி அப்பாக்களால் தாக்குதலுக்கும் ஆளானார்கள். ஆனாலும் பிள்ளைகள் சோர்வுறவில்லை. குழந்தைகள் நடத்திய இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம், ஊரின் பதின்ம வயது இளைஞர்களை முதலில் பாதித்தது. அவர்கள் மதுவைக் கைவிட்டார்கள். கூடவே, குடித்துவிட்டு ஊருக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடும் போட்டார்கள். ஓரிரு மாதங்களிலேயே மாற்றங்கள் தொடங்கின. இன்று முற்றிலும் மதுவே இல்லாத கிராமமாக அது மாறிவிட்டது.
மதுவுக்கு அடிமையாவதாலும், கள்ளச்சாராயம் குடிப்பதாலும் எத்தனை பேர் இறக்கின்றனர். கடந்த வாரத்தில் இயற்கை எய்திய இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், “உயிர் என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது, அது கடவுளால் மட்டுமே பறிக்கப்பட முடியும் என்று சொல்லியிருக்கிறார். மரணதண்டனைக்கு எதிராக அவர் பேசியபோது இவ்வாறு சொல்லியிருந்தாலும், மனித உயிர் விலையேறப்பட்டது என்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அன்பர்களே, மதுவை ஒழிக்க முடியுமா, முடியும். அதில் மூழ்கிக் கிடக்கும் குடிமகன்கள் திருந்த முடியுமா, முடியும். இதற்குப் பல முன்னாள் குடிமகன்களின் வாழ்வே சான்று. மாற்றம் என்பது சாத்தியமே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.