2014-12-06 14:47:01

புனிதரும் மனிதரே - மன்னரை மண்டியிடச் செய்த ஆயர்


இத்தாலியின் மிலான் நகரில் ஆயரைத் தேர்ந்தெடுக்க, திருஅவைத் தலைவர்கள் கூடியிருந்தனர். கருத்து வேறுபாட்டினால் அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்திருந்தனர். அவ்விரு குழுக்களுக்கும் இடையே, கலவரம் நிகழாமல் கட்டுப்படுத்த, அந்நகரின் ஆளுனராக இருந்த Aurelius Ambrosius அவர்கள், கோவிலுக்குச் சென்றார். அவர் கிறிஸ்தவர் அல்ல. ஆயினும், கிறிஸ்தவ மறையைத் தழுவ ஆவல் கொண்டு, தன்னையே தயாரித்து வந்தார்.
மிலான் கோவிலில் கூடியிருந்த கூட்டத்தில், கூச்சலும், குழப்பமும் அதிகரித்து வந்தன. திடீரென கூட்டத்தில் ஒருவர், "அம்புரோஸ்தான் நம் ஆயர்" என்று குரல் எழுப்ப, அது விரைவில் அங்கிருந்த அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்துபோன ஆளுனர் அம்புரோஸ் அவர்கள், எவ்வளவோ மறுத்தும், அங்கிருந்தோர் தங்கள் முடிவை மாற்றவில்லை. அடுத்த சில மாதங்களில், அம்புரோஸ் அவர்கள் திருமுழுக்கு பெற்றார். தொடர்ந்து, அவர் குருவாகவும், ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
செல்வம் மிகுந்த உயர்குடியில் பிறந்த அம்புரோஸ் அவர்கள், மிலான் ஆயராகப் பொறுப்பேற்றதும், தன் சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்கு வழங்கினார். மிலான் நகரில் இருந்த பல செல்வந்தர்களை அவ்வாறே செய்யுமாறு தூண்டினார். ஆயர் இல்லத்தில் மிக எளிய வாழ்வை அவர் மேற்கொண்டார்.
அரச குடும்பத்தினருடன் அடிக்கடி எழுந்த மோதல்களில், ஆயர் அம்புரோஸ் அவர்கள், திருஅவையைச் சிறிதும் விட்டுக்கொடுக்கவில்லை. மன்னர் என்ற முறையில் தன் அதிகாரத்தைக் காட்ட விழைந்த மன்னன் தியோடோசியுஸ், 7000 மக்கள் வாழ்ந்துவந்த ஓர் ஊரை முற்றிலும் அழித்தார். மன்னன் செய்த குற்றத்திற்கு, அவர் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகக் கழுவாய் தேடாவிடில், அவரைத் திருஅவையிலிருந்து விலக்கப்போவதாக ஆயர் அம்புரோஸ் அவர்கள் தெரிவித்தார்.
மன்னரை இவ்வளவு துணிவுடன் எதிர்த்த ஆயரைக் கண்டு மக்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில நாட்களில், மன்னர் தியோடோசியுஸ் அவர்கள், மக்கள் முன்னிலையில், ஆயர் அம்புரோஸ் அவர்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது, மக்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.
திருஅவையின் மறைநூல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் புனித அம்புரோஸ் அவர்களின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவர், புனித அகஸ்டின். புனித அம்புரோஸ் அவர்கள், மிலான் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட, டிசம்பர் 7ம் தேதியே, அவரது திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.