2014-12-06 16:25:57

திருவருகைக் காலம் பிறரன்பில் வளர உதவுகின்றது, கராச்சி பேராயர்


டிச.06,2014. அடுத்தவர்மீது நாம் கொண்டுள்ள அன்பில் வளரவும், விசுவாசத்தை ஆழப்படுத்தவும், கடவுளின் வாக்குறுதிகளில் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், தூய ஆவியாரின் கொடைகளுக்கு இதயங்களைத் திறக்கவும் கிறிஸ்மஸ்க்குத் தயார் செய்யும் திருவருகைக் காலம் உதவுகின்றது என்று பாகிஸ்தான் தலத்திருஅவை கூறியுள்ளது.
கராச்சி மறைக்கல்வி மையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்குகொண்ட பல்வேறு கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களுக்கு உரையாற்றிய கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், திருவருகைக் காலத்தின் சிறப்பை எடுத்துச் சொன்னார்.
இத்திருவருகைக் காலத்தில், இதயங்களிலும், குடும்பங்களிலும், இல்லங்களிலும் செப உணர்வைப் போற்றி வளர்க்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
மேலும், Faisalabad நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில், பாகிஸ்தானின் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து உழைப்பதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தீர்மானித்தனர்.
டிசம்பர் 03, கடந்த புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று இவ்வாறு இவர்கள் உறுதி எடுத்தனர்.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் மாற்றுத்திறனாளிகள்.

ஆதாரம் : Fides /AsiaNews







All the contents on this site are copyrighted ©.