2014-12-06 16:25:11

திருத்தந்தை : குடும்பத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் யுக்திகள், பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கு உதவும்


டிச.06,2014. “திருவருகைக் காலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்க வைத்துள்ளது, இப்பயணத்தில் நம் அன்னையாகிய மரியாவால் நாம் வழிநடத்தப்பட நம்மைக் கையளிப்போம்” என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வட இத்தாலியின் Riva del Gardaவில் நடந்த குடும்ப விழாவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்துக்கு ஆதரவாக எடுக்கப்படும் யுக்திகள், பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கு உதவும் என்று கூறியுள்ளார்.
எதனாலும் ஈடுசெய்ய முடியாத மற்றும் அடிப்படையான இடத்தை, சமுதாயத்திலும் திருஅவையிலும் குடும்பம் கொண்டிருக்கின்றது என்றும், மனித சமுதாயத்தின் எதிர்காலம் குடும்பம் வழியாகச் செல்லவேண்டியிருப்பதால், குடும்பத்திற்குச் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
குடும்பத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தி அதன் உரிமைகளை வலியுறுத்தினால் மட்டும் போதாது, மாறாக, சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் இடையேயுள்ள, குறிப்பாக, வேலைக்கும், குடும்பவாழ்வுக்கும் இடையேயுள்ள உறவு தெளிவாகப் பேசப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
வேலைவாய்ப்பின்மையின் கொடுமை, குறிப்பாக, இளையோரின் வேலைவாய்ப்பின்மை,
கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும், குடும்பமும் சமுதாயத்தில் தனக்கிருக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“வாழ்வு மற்றும் தொழிலின் சுற்றச்சூழல் அமைப்பு : பெண்களின் வேலை வாய்ப்பு, பிறப்பு விகிதம், பொருளாதார வளமை, பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பில் Riva del Gardaவில் நடைபெற்ற ஐந்து நாள் குடும்ப விழா இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.