2014-12-06 16:26:12

இந்தியப் பெருங்கடலில் குடியேற்றதாரரின் ஒளிவுமறைவான ஆபத்தான பயணங்கள் தொடர்கின்றன


டிச.06,2014. இந்தியப் பெருங்கடலில் கடத்தல்காரர்களின் படகுகளில் பயணம் செய்வது மிகுந்த ஆபத்தானது என்று தெரிந்தும், பல குடியேற்றதாரர் தங்கள் வாழ்வை ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர் என்று ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனமான UNHCR கூறியது.
தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளுக்குச் செல்வதற்காக வங்காள விரிகுடா வழியாக ஆண்டுதோறும் பயணம் செய்யும் ஏறக்குறைய 53 ஆயிரம் பேர் உட்பட, இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில் 54 ஆயிரம் பேர் ஒளிவுமறைவாக ஆபத்தான படகுப்பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று UNHCR நிறுவனச் செய்தித் தொடர்பாளர் William Spindle அவர்கள் கூறினார்.
வங்காள விரிகுடா வழியாகச் செல்பவர்கள் தலா, 1,600 டாலர் முதல் 2,400 டாலர் வரைக் கட்டணம் செலுத்திச் செல்வதாகவும், இவ்வாறு 2012ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்ததாக நம்பப்படுவதாகவும் கூறினார் Spindle.
சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்தப் படகு வர்த்தகர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 25 கோடி டாலர் வருவாய் சேர்த்துள்ளனர் என்றும் Spindle அறிவித்தார்.
பங்களாதேஷ் மற்றும் மியான்மாரிலிருந்து இவ்வாறு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.