2014-12-05 16:32:07

அமைதி, கோடிக்கணக்கனகான மக்களின் இதயங்களில் உரக்கக் கத்தி அழுகிறது


டிச.05,2014. அமைதி, இக்காலத்தில், கோடிக்கணக்கனகான மக்களின் இதயங்களில் உரக்கக் கத்தி அழுகிறது என்று இவ்வெள்ளியன்று திருவருகைக்காலச் சிந்தனையில் கூறினார் பாப்பிறை இல்ல மறையுரையாளர் கப்புச்சின் சபை அருள்பணியாளர் Raniero Cantalamessa.
இவ்வெள்ளி காலை ஒன்பது மணிக்கு, அப்போஸ்தலிக்க மாளிகைச் சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு திருவருகைக்காலச் சிந்தனை வழங்கிய அருள்பணியாளர் Cantalamessa அவர்கள், இவ்வாண்டு திருவருகைக்காலச் சிந்தனைகளை அமைதி என்ற தலைப்பில் வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
அமைதி, கிறிஸ்து இயேசுவில் கடவுளின் கொடை, அமைதிக்காகப் பணி செய்வதற்கான கடமை, அமைதி, தூய ஆவியாரின் கனி ஆகிய தலைப்புகளில் திருவருகைக்காலச் சிந்தனைகள் அமையும் என்றும் கூறினார் அருள்பணியாளர் Cantalamessa.
மனிதர், தான் இறைவனின் சாயலைக் கொண்டிருக்கும் உணர்வை இழப்பதே மனிதர் விசுவாசத்தையும் மதத்தையும் இழப்பதற்குக் காரணம் எனவும், இப்படி வாழும் கிறிஸ்தவர் அமைதியின்றி வாழ்கின்றனர் எனவும் கூறினார் அருள்பணியாளர் Cantalamessa.
திருவருகை மற்றும் தவக்காலச் சிந்தனைகளை அந்தந்தக் காலங்களில், திருத்தந்தை உட்பட திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார் பாப்பிறை இல்ல மறையுரையாளர் அருள்பணியாளர் Cantalamessa.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.