2014-12-04 16:49:57

வருங்கால வளமான வாழ்வுக்கு குடும்பங்களே சிறப்புப் பங்காற்றுகின்றன


டிச.04,2014. குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், அவற்றின் தேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்துப் புரிந்துகொள்ளவும், குடும்ப அங்கத்தினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து கவனம் செலுத்தவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆற்றியுள்ள செயல்பாடுகளைக் குறித்துச் சிந்திப்போம் என ஐ.நா. பொது அவையில் அழைப்புவிடுத்தார் பேராயர் Bernardito Auza.
குடும்பங்களின் உலக ஆண்டு சிறப்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுக்கூரும் விதமாக ஐ.நா.வில் இடம்பெற்றக் கூட்டத்தில் ஐ.நா. பொது அவை அமர்வுகளில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் Auza அவர்கள் உரையாற்றியபோது, முரண்பாடுகளைக் களைந்து, அமைதி நிறைந்த சமூகங்களைக் கட்டியெழுப்பவும், விவசாயத்தை வளர்த்து, நகர்களுக்குள் குற்றங்களைக் குறைக்கவும், பூமியை பராமரித்து, உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், ஏழ்மையை ஒழிக்கவும் குடும்பங்களே எப்போதும் முன்னணியில் நிற்கின்றன என்று கூறினார்.
வருங்காலச் சமுதாயத்தை வளர்ப்பதிலும், நோயாளிகள் மற்றும் முதியோர் மீது காட்டும் அக்கறையிலும் குடும்பங்கள் ஆற்றிவரும் சிறப்புப் பங்கை பாராட்டிய பேராயர் Auza அவர்கள், இதன் வழியே, சமுதாயத்திற்கும் அரசுக்கும் குடும்பங்கள் உதவுகின்றன என எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.